”மத்தளத்தைபோல இருக்கிறது என் நிலைமை.. பிரைவேட் ஸ்பேஸே இல்ல” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

”மத்தளத்தைபோல இருக்கிறது என் நிலைமை.. பிரைவேட் ஸ்பேஸே இல்ல” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
”மத்தளத்தைபோல இருக்கிறது என் நிலைமை.. பிரைவேட் ஸ்பேஸே இல்ல” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை (அக்.,09) தொடங்கி நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் ஐயாயிரம் பேர் பங்கேற்றிருந்தனர்,

பொதுக்குழுவில் கட்சியின் தேர்தல் ஆணையராக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து திமுகவின் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவரது மனுவை 2,000க்கும் மேலானோர் வழிமொழிந்துள்ளதாக ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

இதன் மூலம் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆற்காடு வீராசாமி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல மகளிரணி செயலாளராக இருக்கக் கூடிய கனிமொழி துணைப் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அதன் பின்னர் பொதுக்குழு மேடையில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார்.

அதில், “அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிட்டோம், ஆட்சி பொறுப்புக்கு வந்துவிட்டோம் என மெத்தனமாக இருக்க முடியாது. பெற்ற வெற்றியை நிரந்தரமாக தக்க வைக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட திமுகவின் செல்வாக்கு மக்களிடையே அதிகரித்திருக்கிறது. ஆனால் அதுதான் பயத்தை கொடுக்கிறது. திமுகவின் மீதும், என் மீதுமான மக்களின் நம்பிக்கை உயர உயர அந்த நற்பெயரை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருக்கிறது.

மழையே பெய்யவில்லை என்றாலும், அதிகமாக மழை பெய்தாலும் என்னைதான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கத்தில் இருந்தும் வரக்கூடிய பல்முனை தாக்குதலுக்கு பதில் சொல்வதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஒரு பக்கம் தி.மு.க. தலைவர்; இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதல்வர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை.

இத்தகைய சூழலில் இருக்கக் கூடிய என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கட்சி நிர்வாகிகளோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

கட்சிக்காரர்கள் யாரும் புது பிரச்னையை உருவாக்கியிருக்கக் கூடாது என்ற நினைப்போடுதான் நாள்தோறும் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் தூங்கவிடாமலும் செய்கிறது. உங்களுடைய செயல்பாடுகள் கட்சிக்கும் உங்களுக்கும் பெருமையை கொடுப்பது போலவே இருக்க வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக இருக்கக் கூடாது.

பொது இடங்களில் சிலர் நடந்துகொண்டதன் முறை காரணமாக திமுக பழிக்கும், ஏளனத்துக்கும் ஆளானது. இன்றைக்கு வீட்டின் பாத்ரூம், படுக்கை அறையை தவிர அனைத்தும் பொது இடமாகிவிட்டது. பிரைவேட் ஸ்பேஸ் என எதுவும் இல்லை. எல்லோருக்கும் 3வது கண்ணாக செல்ஃபோன் முளைத்திருக்கிறது. உங்களுடைய ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. ஆகவே உங்களுடைய நேரத்தை கண்ணியமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நாம் பயன்படுத்தக் கூடிய சொற்கள் மிக மிக மிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும். எனவே பொதுமேடை மட்டுமல்லாமல் அடுத்தவர்களிடம் பேசும்போதும் மிகவும் எச்சரிக்கையாக பேசுங்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதை வெட்டியும் ஒட்டியும் பரப்பிவிடுவார்கள்.

இதற்கு பதில் சொல்வதற்கே நமக்கு நேரம் சரியாகிவிடும். பிறகு எப்படி மக்கள் பணியை பார்க்க முடியும். இப்படியாக நமது கவனத்தை திசைத்திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம். நாம் செய்யும் சாதனைகளில் குறைகளை கண்டுபிடிக்க முடியாதவர்கள், மக்கள் நலத் திட்டங்களை பார்த்து மலைத்து கிடப்பவர்கள் கொச்சைப்படுத்துவதன் மூலம் குளிர்காய பார்ப்பார்கள். அதற்கு கட்சிக்காரர்களே இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதுதான் என்னுடைய கவலை.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com