Published : 08,Oct 2022 08:18 PM

"அவருக்கு ”இந்து” என்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது" - திருமாவளவனை சாடிய அர்ஜுன் சம்பத்

He-is-allergic-to-the-word--Hindu---Tamil-Nadu-is-the-land-of-Sanghis---Arjun-Sampath

தொல் திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளதாகவும், அதனால்தான் அவர் இந்து சமய அறநிலையத்துறையை சைவம் வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார், ஆனால் தமிழகம் சங்கிகளின் பூமி என்றும் அர்ஜுன் சம்பத் பேசியுள்ளார்.

வள்ளலார் அவதரித்த தினத்தை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை கோயிலில் இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் 200 பேருக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக மாநில OBC பிரிவின் பொது செயலாளர் சூர்யா சிவா கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அர்ஜுன் சம்பத், புலால் மறுத்தல், ஜீவகாருண்யம் உள்ளிட்டவை வள்ளலாரின் கொள்கை இந்த கொள்கைகளை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் மற்றும் மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழிக்கு நேற்று நாடாளுமன்றத்தில் பஞ்சாயத்து ராஜ் நிலை குழு தலைவர் பொறுப்பை வழங்கியுள்ளனர். மாநிலத்திற்கு சுயாட்சி கேட்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் கிராமத்திற்கு சுயாட்சி கொடுத்ததே இல்லை. அத்தகைய கட்சியை சேர்ந்த கனிமொழிக்கு இந்த பதவி கொடுத்ததை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம் கடற்கரையில் அமைப்பதற்கு ஆரம்ப கால அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளதையும் வன்மையாக கண்டிக்கிறோம்.

image

தொல் திருமாவளவனுக்கு இந்து என்கின்ற வார்த்தை அலர்ஜியாக உள்ளது. அதனால்தான் இந்து சமய அறநிலையத்துறையை சைவம் வைணவம் என தனித்தனியாக பிரிக்க வேண்டும் என்கிறார். வாதத்திற்காக இதை எடுத்துக் கொண்டாலும் திருமாவளவன் வேட்பு மனு தாக்கல் செய்த சான்றிதழில் இந்து என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் தான் மு.க.ஸ்டாலின், வீரமணி உள்ளிட்டோரியின் சான்றிதழிலும் இந்து எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை முதலில் மாற்றிவிட்டு இந்து சமய அறநிலையத்துறை பேரை மாற்றுவது குறித்து பேசலாம். அப்படி மாற்றி வைக்க வேண்டுமானால் திருமாவளவன் கிறிஸ்தவ அறநிலையத்துறை, முஸ்லிம் அறநிலையத்துறை உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதை ஆதரிக்க வேண்டும்.

image

இந்து என்கின்ற அடிப்படையில் எல்லோரும் ஒன்று கூடுவதும், ஒற்றுமையோடு இருப்பதையும் இவர்கள் எதிர்ப்பதன் காரணமாகவே இது போன்ற கருத்துக்களை முன் வைக்கின்றனர். பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ராஜராஜ சோழன் இந்து அல்ல, வள்ளலார் இந்து அல்ல என்று தெரிவித்து வருகின்றனர் அப்படியானால் யார் தான் இந்து?. திட்டமிட்டு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களும், திராவிட இயக்கங்களும் இந்துக்களை இந்துக்கள் அல்லாதோர் என்ற பட்டியலில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறார்கள் அந்த முயற்சியை முறியடிப்போம் சனாதனம் காப்போம்.

image

இந்து எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு ஆகியவைகள் மின்கட்டணம் உயர்த்தும்போதும், அதை திசை திருப்புவதற்காக தான் செய்யக் கூடியதாக இருக்கிறது. மின் கட்டணம் வரும்போது தான் மக்களுக்கு தெரியும் எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்று, கரண்டை தொட்டால் தான் ஷாக் அடிக்கும், ஆனால் கரண்ட் பில் பார்த்தாலே ஷாக் அடிக்கிறது என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சொன்னதை நான் நினைவு கூறுகிறேன். தற்பொழுது மேற்கண்ட நிகழ்ச்சிகளை திசை திருப்பத்தான் இந்து எதிர்ப்பு என்ற செயலை செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்