Published : 08,Oct 2022 02:42 PM
வைகை ஆற்றில் குளித்தபடி வலம்வந்த நீர் காகங்கள்.. ’வாவ்வ்வ்’ என சொல்ல வைக்கும் வீடியோ!

வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நீர் காகங்கள் ஆனந்த குளியல் போட்டு பறந்து செல்லும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்ததால் வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து வைகை ஆற்றின் வழியாக சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட நீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக வைகை ஆற்றில் தொடர்ச்சியாக நீர் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், வைகை ஆற்றில் இருக்கும் மீன்களை உண்பதற்காக நீர் காகம், நாரை, கொக்கு போன்ற பல்வேறு வகையான பறவைகள் பல்வேறு இடங்களில் இருந்து வைகை ஆற்றுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளன. இதையடுத்து இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான நீர் காகங்கள் ஒருசேர வைகை ஆற்றில் குளித்தபடி பறந்து சென்றன.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஆயிரக்கணக்கான நீர் காகங்கள் ஒருசேர வைகை ஆற்றின் மேல் குளித்தபடியே பறந்து செல்லும் காட்சி மனதில் பரவசத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.