Published : 07,Oct 2022 08:56 PM
தோனியா? ரன்பீர் கபூரா? - தோனியின் மெழுகு சிலையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி மெழுகு சிலை அருங்காட்சியகத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டநிலையில், ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சர்வதேச அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி எப்போதும் கொண்டாடப்படும் கிரிக்கெட் வீரர்களில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு எப்போதும் சிறப்பான இடம் உண்டு. ஏனெனில் அனைத்துவிதமான, அதாவது 50 ஓவர் உலகக் கோப்பை, 20 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 கோப்பைகளையும் பெற்றுக்கொடுத்த ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக எம்.எஸ் தோனி இருந்து வருகிறார். மேலும் இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாகவும் ஜொலித்தவர் தோனி.
கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஓய்வினை அறிவித்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்துவிதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சமூகவலைத்தளம் வாயிலாக தனது ஓய்வினை தோனி அறிவித்தார். எனினும், உள்ளூர் போட்டியான ஐபிஎல் டி20 தொடரில் மட்டும் சென்னை அணிக்காக தற்போதும் கேப்டனாக இருந்து வழிநடத்துவதுடன் விளையாடியும் வருகிறார்.
இந்நிலையில், தோனியை கௌரவிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டேஸ்வரி மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் அவரின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் கிரிக்கெட் ரசிகர்கள் இதனால் மகிழ்ச்சி அடைந்தாலும், மறுப்பக்கம் தோனி மாதிரியே இல்லை இந்த மெழுகு சிலை என்று மீம்ஸ்களை பறக்கவிடுகின்றனர் ரசிகர்கள்.
தோனியா இல்லை அது ரன்பீர் கபூரா என்றும், இந்த சிலையை உருவாக்கிய கலைஞர் தான், பிரபாஸின் ‘ஆதிபுருஷ்’ படத்திற்கும் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்டுள்ளார் என சரமாரியாக கிண்டல் அடிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் அது தோனி இல்லை, இந்திய ஜெர்ஸியில் உள்ள சோயிப் மாலிக் என்றும் கூற ஆரம்பித்து விட்டனர் நெட்டிசன்கள். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
The artist who made this statue is the same who created VFX for Adipurush
— Sagar (@sagarcasm) October 7, 2022
What if Dhoni and Ranbir Kapoor had a single statue.
— Player of the Decade (@vk18_GOAT) October 7, 2022
Shoaib malik in indian cricket team jersey with diffrent hair style https://t.co/wMhx8SDFKC
— harRy (@HarRyMa52256977) October 7, 2022