Published : 07,Oct 2022 05:04 PM
ஒரு வயது குழந்தையின் கையில் ’பட்டா கத்தி’ கொடுத்து கேக் வெட்டச்சொன்ன சித்தப்பா கைது

காரைக்குடியில் ஒரு வயது குழந்தையின் கையில் பட்டாகத்தி கொடுத்து பிறந்தநாள் கேக் வெட்ட சொன்ன விஜய் என்பவர் தற்போது வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர்மீது ஏற்கனவே கொலை வழக்கு உட்பட 18 வழக்குகள் உள்ள நிலையில், ஜாமீனில் வெளியே வந்தவர் வழிப்பறி வழக்கில் மீண்டும் கைதாகியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சத்யா நகர் குடியிருப்பில் வசித்து வருபவர் விஜய்(26). இவர்மீது குன்றக்குடி காவல்நிலையத்தில் கொலைவழக்கு உட்பட, காரைக்குடி உட்கோட்டத்தில் 18க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தார். பின்பு நீதிமன்ற உத்தரவின்படி, தினமும் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வந்தார்.
வழக்கம்போல் நேற்றும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பியவர், காரைக்குடி மருது பாண்டியர் நகரில் கிஷோர் என்ற கொத்தனாரை வழிமறித்து, அவர் அணிந்திருந்த மோதிரத்தை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளார். இதுகுறித்து கிஷோர் கொடுத்த புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட போலீசார் விஜயை கைதுசெய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதனிடையே, கைதான விஜய் ஒரு வயதான அண்ணன் மகன் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், வீச்சரிவாளை கையில் கொடுத்து பிறந்தநாள் கேக்கை வெட்டச்செய்யும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்தும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.