Published : 05,Oct 2022 06:11 PM

`வெயில்னா புழுதி; மழைன்னா சகதி... இதாங்க எங்க கதி!’ -ஆடி அசைந்து அவதியுறும் கோவை மக்கள்

Coimbatore-pothanur-road-issue

கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து போத்தனூர் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் மிகவும் மந்தமாக நடைபெறுவதால் மிகவும் கடுமையான சிரமங்களுக்கு ஆளாகி வருவதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் வியாபாரிகளும் வேதனை தெரிவித்துள்ளனர். பல்வேறு பகுதிகளுக்கு இணைப்புச் சாலையாக உள்ள இப்பகுதியின் சாதாரண மற்றும் மழைக்கால நிலைமை மிக மிக  மோசமாக உள்ளது.

கோவை மாவட்டத்தின் உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆத்துப்பாலம் டூ போத்தனூர் சாலை சந்திப்பு. சுமார் 5 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த சாலையை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பகுதியில் ஏராளமான திருமண மண்டபங்கள், உணவு கடைகள் துணிக்கடைகள் உள்ளன. போத்தனூர் காவல் நிலையமும் இங்குதான் அமைந்துள்ளது. எப்போதுமே பரபரப்பாக காணப்படும் இந்த சாலை, முகூர்த்த நாட்களில் வழக்கத்தை விடவும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் உடன் காணப்படும்.

image

ராமநாதபுரத்தில் இருந்து நஞ்சுண்டாபுரம் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், வெள்ளலூர் பகுதியில் இருந்து டவுனுக்கு வரும் மக்கள், போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து நகருக்குள் செல்லும் மக்கள் என உள்ளூர் வாசிகள் மட்டும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சார்ந்த மக்களும் இந்த சாலையை பிரதானமாக பயன்படுத்துகின்றனர்.

இப்படி பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சாலை கடந்த ஆறு மாதங்களாகவே மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாளை சாக்கடை திட்ட பணிகள் இந்த சாலையை பயன்படுத்துவோரை சொல்லவடங்கா துயரில் ஆழ்த்தி வருகிறது. சாதாரண நாட்களில் புழுதியும் மழைக்காலங்களில் சேறும் என கடுமையான இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் வாகன ஓட்டிகள்.

image

பாதாள சாக்கடை பணிகளுக்காக சாலையின் ஒரு புறம் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருப்பதால் பயன்படுத்தப்படும் சாலை பகுதி குறுகலாக காணப்படுகிறது. இதனால் அவசர மருத்துவ தேவைகளுக்கு செல்வோர் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். மாற்றுச்சாலையை பயன்படுத்தலாம் என்றால் அது பல கிலோமீட்டர் சுற்றியே நகரக்குள் செல்ல முடியும் என்ற சூழலில் உள்ளது.

வெயில் காலங்களில் கிளம்பும் புழுதியால் சாலையோரம் உள்ள கடைகளில் உள்ள உணவுகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், அதிக மாசு ஏற்படுவதாகவும், மழைக்காலங்களில் சேரு சகதிகளில் வாகனங்கள் சிக்கி சிலர் விபத்திற்கு உள்ளாகி படுகாயங்கள் அடைவதாகவும் இப்பகுதிவாசிகள் கூறுகின்றனர். இதனிடையே சில தினங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றும் கவிழ்ந்து விட்டதாக கூறுகிறார் இப்பகுதியில் கடை நடத்தும் வியாபாரி ஒருவர்.

image

பாதாள சாக்கடை பணிகள் நடந்து வரும் நிலையில் சாலையின் ஒரு பக்கம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் மழைக்காலங்களில் சகதியில் வழுக்கி பள்ளத்தில் விழுந்து விடுவோமோ என்ற அச்சத்துடனே வாகன ஓட்டிகள் உள்ளனர். இதனால் கூடுதலாக எச்சரிக்கை பலகைகளை வைத்தும், இரும்பு தடுப்புகளை கொண்டு பள்ளங்களை மூடிவைத்தும் தங்கள் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இப்படி பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருவதால், இந்த பிரதான சாலையில் பாதாள சாக்கடை பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும், பணிகள் நடைபெறும் வரை இந்தப் பகுதியில் போக்குவரத்து காவலர்களை நியமித்து நெரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

image

மேலும் கூறுகளாக உள்ள சாலையில் சிலர் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தியும் கடைகளின் விளம்பர பலகைகளை வைத்தும் விடுவதால் தங்களுக்கு சிரமம் ஏற்படுவதாக கூறி, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். இது தொடர்பாக பணியில் இருந்த அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, பணிகளை விரைந்து முடிக்கவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

பெரும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எடுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

- பிரவீண்குமார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்