
புதுச்சேரியில் பள்ளிகளின் உணவு இடைவேளை குறைத்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில் உணவு இடைவேளை நேரத்தை பள்ளிக்கல்வித்துறை மாற்றியமைத்து உள்ளது. இதுவரை நடைமுறையில் ஒருமணி நேரம் 35 நிமிடங்கள் இருந்த உணவு இடைவேளையை ஒரு மணிநேரம் 5 நிமிடங்களாக தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பாணை படி காலை 9 மணிக்கு வகுப்புகள் தொடங்கி பகல் 12:25-க்கு உணவு இடைவேளை விடப்படும். மீண்டும் 1:30-க்கு தொடங்கும் வகுப்புகள், வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்னதாக 3:45-க்கே பள்ளி நேரம் முடிந்துவிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறை, காலாண்டு தேர்வு முடிந்து வகுப்புகள் தொடங்கும் அக்டோபர் 3ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. நீண்ட நேரம் உணவு இடைவேளை இருப்பதால் மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுவது தெரிய வந்ததை அடுத்து இந்த நேரமாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நேர மாற்றம் நகரப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் இதர கிராமப்புறங்களில் செயல்படும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.