Published : 03,Oct 2022 01:53 PM

10ம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவு - மேயர் பிரியா

Rainwater-drainage-works-will-windup-soon-chennai-mayor-priya-press-meet

சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை 10ம் தேதிக்கு முன்பாக முடிக்கவும் மற்றும் 7ம் தேதிக்கு முன்பாக கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முடிக்கவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னையில் துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் மற்றும் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து, தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், இந்து சமய அறநிலைய துறை அமைச்சருமான சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

image
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, ‘’ சென்னை மாநகராட்சியில் முக்கிய பணியாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது, வருகின்ற 15ஆம் தேதிக்கு பின் மழைக்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அனைத்து தொகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதில் முதல் கட்டமாக துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது.

சென்னை மாநகராட்சி பொறுத்தவரை சிங்கார் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் PHASE 1, PHASE 2 என இரண்டு திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, கடந்த முறை அதிகமாக மழை நீர் தேங்கிய இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் PHASE 1 திட்டத்தின் கீழ் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

இந்த PHASE 1 திட்டத்தில் 95% பணிகளும் ,PHASE 2 திட்டத்தில் 85 % சதவீத பணிகளும் தற்போது வரை நடைபெற்று முடிந்துள்ளன வருகின்ற 10 ஆம் தேதிக்கு முன்பாக அனைத்து பணிகளையும் முடிக்க அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த பணிகளை ஆய்வு செய்த தலைமை செயலாளர் இறையன்பு விரைவாக கால்வாய்களை தூர் வாரும் பணிகளையும் முடிக்க வேண்டும் என தெரிவித்தார். அதன் அடிப்படையில் தற்போது 1000 கிலோ மீட்டர் வரை தூர் வாரும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. வருகின்ற 7ஆம் தேதிக்கு முன்பாக அந்த பணிகளையும் முடிக்க வேண்டும் என பணிகள் விரைவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் மழை நீர் காலங்களில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது” என தெரிவித்தார்.

image

பின்னர் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ‘’ சென்னை மாநகராட்சியில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி,குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி,கழிவு நீர் குழாய் மாற்றும் பணி என 2500-க்கும் மேற்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன, இந்த பணிகள் நடைபெறும்போது கடினமாக இருந்தாலும் மழை காலங்களில் இருந்து ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன என மக்கள் புரிந்து கொள்வார்கள்'' என தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்