Published : 30,Sep 2022 08:16 AM

ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு - தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் `பொன்னியின் செல்வன்- பாகம் 1’

Ponniyin-selvan-first-part-movie-released-today

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரு பாகங்களாக உருவாகியுள்ளது. நடிகர்கள் ஜெயம்ரவி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகைகள் ஐஷ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா என பலரும் நடிக்கும் இப்படத்தின் முதல் பாகம், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று மதியம் சென்னை லீலா பேலஸில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் நடிகர் விக்ரம், ஜெயம்ரவி, பார்த்திபன், விக்ரம் பிரபு, நடிகை த்ரிஷா, ஐஸ்வர்ய லக்ஷ்மி, சோபிதா ஆகியோர் கலந்து கொண்டனர். படம் வெளியாவது பற்றியும், படத்திற்கான ப்ரமோஷன்களுக்காக சென்று வந்த பயணம் பற்றியும் இந்த நிகழ்வில் அனைவரும் பகிர்ந்து கொண்டார்.

image

நிகழ்வில் பேசிய ஜெயம் ரவி, "நாளை (இன்று) படம் ரிலீஸ் ஆகிற டென்ஷன் இருக்கிறது. ஆனால், எங்கள் உழைப்பை மக்கள் பார்க்கப் போகிறார்கள் என்ற சந்தோஷத்துடன் இருக்கிறோம். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்தது நல்ல அனுபவமாக இருந்தது. எல்லா நகரங்களிலும் அவர்களின் பாரம்பரியத்தோடு எங்களை வரவேற்றார்கள். இந்தப் படத்தின் மூலம் கல்கி அவர்களின் ஆன்மா சாந்தி அடையும். மேலும் மணி சார் கனவு, தமிழ்மக்களின் கனவு நாளை நனவாகப் போகிறது" என்றார்.

image

நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி பேசுகையில், “இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நாளும் பல விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் சிறப்பானது. இந்தப் படம் எவ்வளவு பெரிய வெற்றியடைய வேண்டும் என்றால், இப்படி ஒரு வெற்றியை இதற்கு முன் யாரும் பார்த்தே இருக்கக் கூடாது. அந்த அளவு ஹிட் ஆக வேண்டும்" என்றார்.

image

அவரைத் தொடர்ந்து த்ரிஷா பேசுகையில், "இந்த சோழா டூரின் போது என்னுடைய தோற்றம் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள். அதற்கு காரணம் எனது குழு. அவர்களுக்கு நன்றி. இந்தப் படத்தின் ப்ரமோஷன் பணிகளை சென்னையில் தான் துவங்கினோம். இப்போது மறுபடி சென்னையிலேயே முடித்திருக்கிறோம்.

பொதுவாக ஒரு பட வெளியீட்டுக்கு முன்பு எந்த டென்ஷனும் இருக்காது. ஆனால் இந்தப் படத்தில் எனக்கு சின்ன டென்ஷன் இருக்கிறது. கூடவே நான் எந்தப் படத்திற்கும் இந்த அளவிற்கு ப்ரமோஷன் செய்ததில்லை. படத்தை பற்றி இவ்வளவு பேசியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அதெல்லாம் நடந்திருக்கிறது. நாளை உங்களைப் போலவே நாங்களும் படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்" என்றார்.

image

நடிகர் பார்த்திபன் பேசுகையில், “ ‘நானே வருவேன்' என அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்தேன். முதலில் இந்த நிகழ்வுக்கு வரும்படி அழைத்த போது தஞ்சாவூர் செல்லும் வேலை இருந்ததால் முடியாது எனச் சொன்னேன். ஆனால் பின்பு கலந்து கொள்ள வேண்டும் எனத் தோன்றியது. அதனால் அடம்பிடித்து இந்த நிகழ்வுக்கு வந்திருக்கிறேன். ஏனென்றால் இப்படியான பிரமாதமான மேடையை எங்காவது இதற்குப் பார்க்க முடியுமா?

image

கிட்டத்தட்ட ஆறு வாரங்களுக்கு மேல் இந்த ஆராவாரம் இருக்கும் என நம்பலாம். ஏனென்றால் இந்த அளவுக்கு எந்தப் படத்திற்கும் டிக்கெட் டிமாண்ட் இருந்ததில்லை. இப்படிப்பட்ட படத்தில் எனக்கும் ஒரு சிரிய பாத்திரம் கொடுத்த இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு நன்றி. மற்றபடி நாளை தஞ்சாவூர் கிளம்புகிறேன். அங்கு சென்று பொன்னியின் செல்வன் பார்க்கப் போகிறேன்" என்றார்.

படம் வெளியான நிலையில், சமூக ஊடகங்களில் பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 2023-ம் ஆண்டில் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்