Published : 28,Sep 2022 10:25 AM
`என் மனைவிக்கு பாலியல் தொல்லை’ பாஜக பொதுச்செயலாளர் மீது சசிகலா புஷ்பா கணவர் பகிரங்க புகார்

பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாஜக பொதுச்செயலாளர் பொன். பால கணபதி மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.
தியாகி இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் கடந்த 11ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தின் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் பலர் அஞ்சலி செலுத்தி இருந்தனர். இவ்விழாவில், திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கலந்து கொண்டன. பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்பியும், மாநில துணை தலைவருமான சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அப்போது, சசிகலா புஷ்பாவிற்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, சில காட்சிகள் இணையதளத்தில் வைரல் ஆகின. இதுகுறித்து பொன். பாலகணபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், தன் மனைவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகி பொன்.பால கணபதி மீது சசிகலா புஷ்பாவின் கணவர் ராமசாமி, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் மின்னஞ்சல் மூலமாக புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தன் மனைவி, சசிகலா புஷ்பா மீது பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்த அக்கட்சியின் நிர்வாகி, பொன்.பால கணபதி மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கூறியுள்ளார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது – தாராபுரத்தில் பரபரப்பு