Published : 24,Sep 2022 01:53 PM
திருச்சி: இளம் தம்பதியர் எடுத்த விபரீத முடிவு – போலீசார் விசாரணை

தொட்டியம் அருகே இளம் தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே அலகரை கிராமத்தைச் சேர்ந்த குமாரசாமி (39) - பரமேஸ்வரி (35), தம்பதியர் அங்குள்ள வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். இந்நிலையில், வீட்டிற்கு பின்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருப்பதாக தொட்டியம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தொட்டியம் போலீசார், தம்பதியரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து முசிறி காவல் சரக துணை கண்காணிப்பாளர் யாஸ்மின் தொட்டியம் காவல் ஆய்வாளர் முத்தையன் மற்றும் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து திருச்சியில் இருந்து வந்த தடய அறிவியல் நிபுணர் ராஜேந்திரன் தலைமையிலான குழுக்கள் சம்பவ இடத்தில் தடயங்கள் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொட்டியம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.