Published : 23,Sep 2022 07:08 PM

அன்று அண்ணா.. இன்று ஆ.ராசா.. சோழர், பாண்டியர் ஆட்சியில் சதுர்வேதி மங்கலம் - சூடான விவாதம்!

what-is-sathuvethi-mangalam

'பிற்காலச் சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் கிராமங்கள் பலவற்றை பிராமணர்களுக்குத் தானமாகத் தந்தனர். நாலு வேதம் ஓதும் பிராமணர்களின் இருப்பிடம் என்பதைக் குறிக்க, இத்தகைய இடங்களுக்கு 'சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிடப்பட்டது.

அண்மையில் திமுக எம்பி ஆ.ராசா மனுஸ்மிருதியை மேற்கொள்காட்டி பேசிய பேச்சை பாஜகவினர், இந்து முன்னணி அமைப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆ.ராசா இந்துக்களை இழிவுபடுத்தி விட்டதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆ.ராசா மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளதுடன் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ''முடிந்தால் என் மீது கேஸ் போடுங்கள். சனாதனம் பற்றி பேசுவதற்கு எனக்கும் வசதியாக இருக்கும்'' என்று ஆ.ராசா சவால் விடுத்துள்ளார்.

அவரது இந்த பேச்சின் சூடு தணிவதற்குள், ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில்தான் தேவர், பள்ளர், பறையர் நிலங்கள் பறிக்கப்பட்டு பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலங்களாக தாரைவார்க்கப்பட்ட வரலாற்றை ஆதாரங்களுடன் ஆ.ராசா பட்டியலிட்டுப் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

image

சதுர்வேதி மங்கலம் குறித்து என்ன பேசினார் ஆ.ராசா?

''உத்தமதானபுரம் ஊரில் சோழ அரசன் ஒருவன் தங்குகிறான். அவருக்கு வேதியர்கள்- புரோகிதர்கள் வழிகாட்டுகின்றனர். ஏகாதசி அன்றைக்கு அன்னந்தண்ணி ஆகாரம் சாப்பிடக் கூடாது.. அப்படி இருந்தால் ஆயுள் நீளும் என்கின்றனர். அந்த அரசரும் அதை கடைபிடிக்கிறார். ஆனால் உத்தமநாதபுரம் ஊரில் சோழ அரசன் தங்கியபோது தவறுதலாக வெற்றிலை பாக்கு போட்டுவிட அந்த தவறுக்கு பிராயசித்தமாக பிராமணர்களுக்கு நிலம், வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அதுதான் சதுர்வேதி மங்கலம். உ.வே.சாமிநாதய்யர் இதை எழுதி இருக்கிறார். எவ்வளவு பெரிய கொடுமை நிகழ்ந்திருக்கிறது தெரியுமா? ராஜராஜ சோழன் ஆகட்டும்.. ராஜேந்திர சோழன் ஆகட்டும்.. எத்தனை லட்சம் நிலங்களை சதுர்வேதி மங்கலங்களாக மாற்றி இருக்கின்றனர்.

முக்குலத்தோர், தேவர், பள்ளர், பறையர் ஆகியோரிடம் இருந்து நிலத்தை பிடுங்கி நாலுவேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம் அமைத்து கொடுத்தனர். அப்படி ராஜராஜ சோழன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொடுத்தார். ராஜேந்திர சோழன் கொடுத்தார். அது எல்லாம் எங்கள் சொத்து. ஆனால் இலவசங்கள் கூடாது என்கிறார்கள். இலவசமாக அனுபவிக்கிறதே நீங்கதான். நீங்க அனுபவிக்கிறது எல்லாமே இலவசம்தான். எங்கிருந்தோ வந்து இங்க வந்து உட்கார்ந்துகிட்டு இலவசத்தை பெற்றுக் கொண்டு, மதத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு, இப்ப நாங்க இலவசமாக உணவு போட்டால் இதெல்லாம் தேவையா? இலவசங்கள் கூடாது என்கின்றனர்'' என்று ஆ.ராசா பேசினார்.  

image

சதுர்வேதி மங்கலம் என்றால் என்ன?

இக்கேள்விக்கான பதிலை பேரறிஞர் அண்ணா 4.7.1943 அன்று தகுந்த ஆதாரங்களுடன் சதுர்வேதி மங்கலம் கட்டுரையில் எழுதியிருக்கிறார்.  அதில் ''பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்களும், விஜயநகர வேந்தரும், கிராமங்கள் பலவற்றை விலைக்கு வாங்கி, பிராமணர்களுக்குத் தானமாகத் தந்தனர். நாலு வேதம் ஓதும் பிராமணர்களின் இருப்பிடம் என்பதைக் குறிக்க, இத்தகைய தானப் பிரதேசங்களுக்கு 'சதுர்வேதி மங்கலம்' என்று பெயரிடப்பட்டது. அக்ரகாரம், பிரம்ம தேசம், பிரம்ம மங்கலம் என்ற வேறு பல பெயர்களும் மேற்படி கிராமங்களுக்கு உண்டு. இத்தகைய பல கிராமங்கள் பிராமணர்களுக்குச் சர்வ மான்யமாகக் கிடைத்ததை நிரூபிக்கும், ஆதாரங்களான, சில சாசனங்களும், கல்வெட்டுகளும் பல உள்ளன.

சுங்கந்தவிர்த்த சோழநல்லூர், 108 பிரிவுகளாக்கப்பட்டு, 106 பிரிவுகள் பிராமணர்களுக்குத் தானமாகத் தரப்பட்டது. இந்தத் தானம், சமந்த நாராயண சதுர்வேதி மங்கலம் என்ற கிராமத்திலுள்ள பிராமணர்களுக்குத் தரப்பட்டது. மற்ற 2 பாகங்கள், மேற்படி கிராமக் கோயிலுக்கு மான்யமாக்கப்பட்டது. இது போன்ற பல தானங்கள், பிராமணர்களுக்குத் தரப்பட்டதுடன், அக்கிராம சேவைக்காக அங்கு மற்ற வகுப்பினர் ஊழியர்களாகத் தங்க வழி செய்யப்பட்டது.

இந்தச் சதுர்வேதி மங்கலம் எனப்படும் அக்கிரகாரத்தில் சுயாட்சியுடன் பிராமணர்கள் இருக்க அனுமதிக்கப்பட்டது. இக்கிராமங்களில், நிலத்துக்குப் பார்ப்பனர் மிராசு பாத்யதையுடை யோராகவும் “சூத்ரர்” வேலை செய்து ஜீவிப்போராகவும் இருந்தனர். ஊர்ப் பரிபாலனம், பிராமணரிடம் இருந்தது. ஆக, தமிழரின் சொத்து, மன்னர்களின் பக்தி எனும் பித்தத்தின் விளைவாகப் பார்ப்பனரிடம் போய்ச் சேர்ந்ததுடன், நாடாண்ட தமிழர்கள் நாய்போல் கிடக்கவும், இடந்தேடித் திரிந்த இனம் ஏடா! வாடா! போடா! என்று கூறித் தமிழரை ஏவலராகக் கொள்ளவுமான இரட்டை அநீதியை உண்டாக்கினர். மனையை இழந்ததுடன், மானத்தையும் மறத்தமிழர் இழக்கும்படி நேரிட்டது. மன்னர்களின் பக்தியின் விளைவு அது.

அன்று நிறுவப்பட்ட சதுர்வேதி மங்கலங்களில், ஆர்வம் ஊட்டி வளர்க்கப்பட்டதன் விளைவு என்னவெனில் இன்று தமிழகமே, சதுர்வேதி மங்கலமானது தான்! சர்வமான்ய உரிமையுடன் ஆரியர் இன்று ஆட்சி செய்கின்றனர். எனவேதான், நாம் இப்பிரச்னையை முக்கியமான தென்று கூறி, இந்நிலை போக்கக் கிளர்ச்சி செய்கிறோம். இது தவறா?'' என்று அந்த கட்டுரையில் அறிஞர் அண்ணா சதுர்வேதி மங்கலம் குறித்து விரிவாக எழுதியிருக்கிறார்.

image

அதேபோல், பிராமணர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்து பல ஆய்வாளர்களும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். பார்ப்பனர்கள் அதிகம் வசித்த, அவர்களுக்க்கு தானமாக வழங்கப்பட்ட அகரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் ஆகிய இடங்களில் கிராம சபை என்ற பெயரில் வழங்கப்பட்டது. வேளாண் மக்கள் வாழ்ந்து வந்த இடங்கள் ஊர் என்றும் அங்கு இருந்த சபைகள் ஊர் சபை என்றும் வழங்கப்பட்டது என்று பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

image

image

“தமிழகத்து மன்னர்கள் தமிழகத்தைச் சேர்ந்த அந்தணர்களிடம் என்ன குறை கண்டனர் என்பது விளங்கவில்லை. இம்மன்னர்கள் ஆயிரக்கணக்கில் வடநாட்டு பிராமணர்களை இறக்குமதி செய்து கோவில்களிலும், கல்வி நிறுவனங்களிலும், மடங்களிலும் அவர்களைப் பணிக்கு அமர்த்தி மரியாதை செய்தனர். பொன்னையும், பொருளையும். குடியுரிமைகளையும் வாரி வழங்கினர்.

image

பிராமணருக்கு மட்டும் நிலங்களும், கிராமங்களும் தானமாக வழங்கப்பட்டன. அகரம், அக்ரஹாரம், சதுர்வேதி மங்கலம், பிரம்மதேயம் எனப் பல பெயரில் இவை விளங்கின. அரசனுடைய ஆணைகள் எதுவும் அவற்றினுள் செயல்படாது. எல்லாவிதமான வரிகள், கட்டணங்கள், ஆயங்கள், கடமைகள் ஆகியவற்றிலிருந்து முழுவிலக்கு பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது” என்று பேராசிரியர் கே.கே.பிள்ளை தம் வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார்.

புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார், “முதலாம் இராசராசன் மற்றும் இராசேந்திரனின் ஆட்சிக்காலத்தில் பிரமதேய கிராமங்களின் தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினர்களின் நில உரிமைகள் சுருக்கப்பட்டன” என்று கூறுகிறார்.

இதையும் படிக்க: `ஆ.ராசா பேசிய வார்த்தை அவரது கட்சி தலைவரின் குடும்பத்துக்கு பொருந்துமா?’- இபிஎஸ் கேள்வி

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்