நீட் போராட்டங்கள்: தமிழக அரசிடம் கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம்
தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் குறித்து தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மருத்துவப் படிப்பில் சேரமுடியாமல் அனிதா என்ற அரியலூர் மாணவி அண்மையில் தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து நீட் தேர்விற்கு எதிரான போராட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. இதற்கிடையே மருத்துவ கலந்தாய்வில் இடமளிக்கக்கோரி உடுமலைப்பேட்டையை சேர்ந்த மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாணவி கிருத்திகா தொடர்ந்த வழக்கில், நீட் தேர்வு குறித்த விழிப்புணர்வு மாணவர்களுக்கு எந்த அளவுக்கு கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எத்தனை போராட்டங்கள் நடந்துள்ளது? போராட்டம் தொடர்பாக எத்தனை மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை தமிழக அரசிடம் நீதிமன்றம் எழுப்பியது. அத்துடன் அரசியல் கட்சியினரை தவிர்த்து இந்த போராட்டத்தை வேறு ஏதேனும் தனியார் அமைப்புகள் தூண்டி விடுகிறதா என்றும் வினா எழுப்பியது. இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.