
தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
நெல்லை மாவட்டம் வடகரையை சேர்ந்த சக்திவேல் என்பவர் மது போதையில் அவரது தாயாரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே காரணமாக உள்ளது என்று கூறினார். இந்த வழக்கில் மத்திய அரசின் கேபினட் செயலர், தமிழக உள்துறை செயலர், டிஜிபி, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோரை எதிர் மனுதாரராக சேர்ப்பதாக நீதிபதி தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதியின்படி மதுவிலக்கிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு எப்போது அமல்படுத்தப்படும் என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். மதுவால் தமிழக அளவிலும், நாடு முழுவதும் எவ்வளவு குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறித்த முழு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என நீதிபதி கேட்டுள்ளார். சிறுவர்களுக்கு மது எளிதில் கிடைப்பதைத் தடுக்கும் சட்டத்தை ஏன் கடுமையாக அமல்படுத்தக்கூடாது? என்றும் நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார்.