Published : 19,Sep 2017 03:49 PM

நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை: ஸ்டாலின் பேட்டி

DMK-will-decide-the-next-step-after-High-court-judgement

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில் நீதிமன்றத் தீர்ப்புக்கு பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்பதாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய ஸ்டாலின், “மக்களுடைய வரிப்பணத்தில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதாகக் கூறிவிட்டு, அரசு விழாவில் அரசியல் நாகரீகமில்லாமல் முதலமைச்சர், துணை முதல்வர், அமைச்சர்கள் ஆகியோர் திமுகவை விமர்சனம் செய்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழே தலைமைச் செயலாளரின் பேரில்தான் வருகிறது. ஆகவே தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரைக் கண்டிக்கின்ற வகையில் முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.

மேலும், “இந்த குதிரை பேர ஆட்சி தொடர்ந்து பெரும்பான்மையில்லாமல் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி சட்டப்பேரவையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்று பலமுறை ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினோம். அதற்குள் 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து, அதை உடனே அரசிதழிலும் வெளியிடுகிறார்கள். இது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கின் விசாரணை நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கின் தீர்ப்புக்கு பிறகு மீண்டும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்” என்று ஸ்டாலின் கூறினார்.

“ஆளுநர் டெல்லி உத்தரவுக்கு ஏற்ப இயங்கிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடியிருக்கிறோம். எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம். இதே எடப்பாடி பழனிசாமி இதற்கு முன்பு பெரும்பான்மையை நிரூபித்தபோது, ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 11 பேர் எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்போது ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பயத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் ஸ்டாலின் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்