Published : 16,Sep 2022 09:59 PM

அதர்வாவின் ‘ட்ரிகர்’ படம் உருவான விதம் - செய்தியாளர் சந்திப்பில் படக்குழுவினர் சுவாரஸ்யம்

Atharvaa-s-Trigger-Movie-Press-Meet

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, அருண்பாண்டியன், தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ள 'ட்ரிகர்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் அதர்வா, அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த், இயக்குநர் சாம் ஆண்டன், தயாரிப்பாளர் ஸ்ருதி நல்லப்பா, ப்ரதீப் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் படம் வருகிற 23-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஸ்ருதி நல்லப்பா பேசுகையில், "இது நாங்கள் தயாரிக்கும் மூன்றாவது தமிழ்ப்படம். 'லக்ஷ்மி', 'மாறா' படங்களுக்குப் பிறகு 'ட்ரிகர்'. எங்கள் முதல் இரண்டு படங்களுக்கு கிடைத்த ஆதரவு தான் எங்களை வழி நடத்துகிறது. இன்னும் நிறைய தமிழ்ப்படங்கள் தயாரிக்க ஆசை. சாம் ஆண்டன் ஒரு ஸ்க்ரிப்ட் வைத்திருக்கிறார் என சுரேஷ் சந்திரா மூலம் தெரிந்தது. அடுத்த நாளே அவரை சந்தித்தேன். அவரின் ‘100’ படம் எனக்குப் பிடிக்கும். அதை விட இரண்டு மடங்கு சிறப்பாக இருக்கும் என ‘ட்ரிகர்’ கதையைக் கூறினார்.

படத்தில் ஆக்ஷன் மட்டுமில்லாமல் ஒரு மெசேஜ் இருக்கும், வெறுமனே ஆக்ஷன் மட்டுமில்லாமல் அதற்கான நியாயமும் கதையில் இருக்கும். எனவே கதை கேட்ட முதல் நாளே ஓகே செய்தேன். ஒரே வாரத்திற்குள் அதர்வா நடிப்பதும் முடிவானது. சாம் மிக வேகமாக படத்தை எடுத்து முடிக்கக் கூடியவர். அதுவும் 100 சதவீதம் பேப்பரில் உள்ளதை அப்படியே எடுப்பார். அதர்வா, முரளி சாரின் மகன் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் பழகக் கூடியவர். இந்தப் படத்திற்காக மிகவும் ஒத்துழைப்பைத் தந்தார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

image

சின்னி ஜெயந்த் கூறுகையில், "38 வருட சினிமா அனுபவத்தில் சில நல்ல படங்கள் செய்திருக்கிறேன். அதில் ஒன்று 'ட்ரிகர்'. இதில் நடித்த அனுபவமே ஒரு இங்கிலீஷ் படத்தில் நடித்தது போல் இருந்தது. அதிலும் நிறைய இரவில் தான் படமாக்கினோம். மாலை 6 மணிக்குத் துவங்கி காலை 8 மணிக்குதான் முடியும். பொதுவாக நைட் ஷூட் நடிப்பது நடிகர்களுக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் இதில் மிக ஜாலியாக நடித்தோம். அப்படியான சூழலை சாம் உருவாக்கித் தந்தார். சாம் பற்றி சொல்வதென்றால் அவர் ஷங்கரும், கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்த கலவை.

அதர்வாவின் தந்தை முரளியுடன் 22 படம் நடித்திருக்கிறேன். அதர்வாவுடன் இது முதல் படம். பொதுவாக சினிமாவில் ஃபைட் சீன் என்றாலே இரண்டு நடிகர்கள் முக்கியமானவர்கள் விஜயகாந்த் மற்றும் அர்ஜூன். அதற்கடுத்து அதர்வா ஃபைட் சீனில் மிக சிறப்பாக நடிக்கிறார். அதர்வாவை ஜூனியர் கேப்டன் என்றுதான் கூறவேண்டும்.

அருண் பாண்டியனை ஒரு சினிமாக்காரராக தெரியும் முன்பு பச்சையப்பாஸ் கல்லூரி மாணவராக தெரியும். அப்போது அவரை எல்லோரும் அமிதாப் பச்சன் என்று அழைப்பார்கள். அப்படி ஒரு உடல் வாகு அவருக்கு. கூடவே அவரின் முதல் படம் ஊர்குருவியில் நான் இணைந்து நடித்தேன். இப்போது அவருடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி" என்று தெரிவித்தார்.

image

நடிகர் அருண்பாண்டியன் பேசுகையில், “சின்னி ஜெயந்த் 38 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். 40 வருடங்களாக சினிமா கையை நான் பிடித்துக் கொண்டு நடக்கிறேன். சினிமாவில் எதாவது ஒரு விதத்தில் ஈடுபட்டே வருகிறேன். 16 வருடம் கழித்து 'அன்பிற்கினியாள்' படத்தில் என் மகளுடன் இணைந்து நடித்தேன். அந்தப் படத்தை சாம் பார்த்திருக்கிறார் போல. கதை சொல்ல வேண்டும் என வந்தார். என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை தெரிந்ததும் இதை ஹீரோவிடம் சொல்லிவிட்டீர்களா எனக் கேட்டேன். அவருக்கு தெரியும் என்றார். பொதுவாக ஒரு ஹீரோ படத்தில் உடன் படிப்பவர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என நினைக்க மாட்டார்கள்.

ஆனால் அதர்வா எல்லோருக்கும் முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என நினைக்கிற நடிகராக இருக்கிறார். படத்தின் நைட் ஷூட்டை சிறப்பாக திட்டமிட்டு எடுத்தார் இயக்குநர் சாம். ‘100’ படம் பார்த்துவிட்டு கடைசி 20 நிமிடம் சிறப்பாக இருந்தது, அது ஏன் முழுப்படத்திலும் இல்லை என்று கேட்டேன். அதை இந்தப் படத்தில் செய்திருக்கிறேன் எனக் கூறினார். பொதுவாக நான் நடித்த படங்களில் எனக்கு முழு சம்பளம் கொடுத்து படங்கள் மிகக் குறைவுதான். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பேசிய சம்பளத்தைக் கொடுத்துவிட்டார்கள். இந்தப் படம் வெற்றியடைந்தால், இவர்கள் மூலம் இன்னும் பலருக்கு முழுச்சம்பளம் கிடைக்கும், வாழ்த்துகள்" என்று தெரிவித்தார்.

சாம் ஆண்டன் பேசுகையில், "இயக்குநராக அறிமுகமாகி ஏழு வருடங்கள் ஆகிறது. ஐந்து படம் இயக்கியிருக்கிறேன். எல்லா படத்திற்கும் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். சுரேஷ் சந்திரா சார் மூலமாக தான் தயாரிப்பாளர் ஸ்ருதி அறிமுகமும், இந்தப் பட வாய்ப்பும் அமைந்தது. முதன் முதலில் ஸ்ருதியை சந்தித்த போது மிக சாஃப்ட்டான நபராக இருக்கிறாரே, ஆக்ஷன் கதை பிடிக்குமா என்று குழம்பினேன். ஆனால் 15 நிமிடம் கதை சொன்னதுமே தயாரிக்க சம்மதித்தார். ஷூட்டிங்கின் போது எந்த தயாரிப்பாளரும் கேட்காத கேள்வியை அவர் கேட்டார். 'சாம் நாலு நாளா ஷூட் பண்றிங்க. ரெண்டு நாள் ப்ரேக் எடுத்துட்டு தூங்கிட்டு வர்றீங்களா?' என்றார். இதுவரை எந்த தயாரிப்பாளரும் இப்படிக் கேட்டதில்லை. ஷூட் ஆரம்பிக்கும் போது, படப்பிடிப்பு முழுக்க தயாரிப்பாளரும் இருக்கப் போகிறார் என்றதும், என்னுடைய உதவிய பயந்தார்கள். ஆனால் அவர் அங்கு இருந்தது எங்களுக்கு மிகவும் பக்கபலமாக இருந்தது. கேட்டதையும் தாண்டி கொடுக்கும் தயாரிப்பாளர்.

image

அதர்வாவிடம் இந்தக் கதை எழுதியதும், சொன்னேன். உடனடியாக நடிக்க சம்மதித்தார். இதற்கு முன் நானும் அதர்வாவும் இணைந்து செய்த '100' படம் தாமதமாக ரிலீஸ் ஆனதால் சரியாக கவனிக்கப்படவில்லை. ஆனால் ஓடிடி வெளியீட்டுக்குப் பிறகு பாராட்டினார்கள். அதனால் இதற்கடுத்து செய்தால் ‘100’ படத்தை விட பெரிதாக ஒன்று செய்ய விரும்பினோம். அது போல் தான் படம் வந்திருக்கிறது. இந்தப் படத்திற்கு அதர்வாவின் ஒத்துழைப்பு மிக அதிகம். படப்பிடிப்பின் கடைசி மூன்று நாட்களின் போது அதர்வாவுக்கு உடல்நிலை சரியில்லை. ஆனாலும் வந்து சண்டைக் காட்சியில் நடித்துக் கொடுத்தார்.

அருண் பாண்டியன் சாரை சந்திக்கும் முன் அவர் டெரர் என நினைத்தேன். ஆனால் சந்தித்த 10 நிமிடங்களில் கம்ஃபர்ட் செய்துவிட்டார். புதுசா கதை சொல்லப் போறியா எனக் கேட்டார். இல்லை பழசுதான் ஆனால் உங்களிடம் ஏமாற்றி விற்றுவிடுவேன் என்றேன். ஷூட்டிங்கிலும் எங்களுடன் மிக ஜாலியாக பழகினார்" என்று தெரிவித்தார்.

image

அதர்வா பேசுகையில், “"நானும் சாமும் '100' படம் செய்தோம். நல்ல படம் எனப் பெயர் பெற்றது. இப்போது 'ட்ரிகர்' அதைவிட பெரிய பெயரைப் பெற்றுத் தரும். எப்போதும் எந்தப் பட ஷூட்டிங் என்றாலும் கடைசி நாளைந்து நாள் போர்க்களம் ஆகிவிடும். ஆனால் ஆரம்பம் முதல் இறுதிவரை இந்தப் படம் ஸ்மூத்தாக சென்றது. சாம் படத்தின் கதைக்காக எல்லோருடைய கருத்துகளையும் கேட்டு சேர்த்துக் கொண்டார். நல்ல படம் செய்திருக்கும் நம்பிக்கை இருக்கிறது.

அருண்பாண்டியன் சாரை படங்களில் பார்த்திருக்கிறேன். சீக்கிரமே ஜெல் ஆகிவிட்டார். படத்தின் கடைசி 20 நிமிடம் அவருக்கு நடிக்க ஸ்கோப் உள்ள ஒரு காட்சி இருந்தது. அதை மிக சிறப்பாக நடித்திருக்கிறார். சின்னி ஜெயந்த் சார் அப்பா உடன் நடித்த போது ஷூட்டிங்கில் பார்த்திருக்கிறேன். இப்போது இந்தப் படம் பண்ணும்போது திரும்ப சந்தித்தேன். அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்