Published : 16,Sep 2022 03:34 PM
மதுக் கொள்கை ஊழல்: சிறையிலுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறை விசாரணை

டெல்லி மதுக் கொள்கை ஊழல் புகார் தொடர்பாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி அமைச்சர் சத்தியந்திர ஜெயினிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி மது கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக சத்தியேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி கடந்த புதன்கிழமை அமலாக்கத்துறையினர் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி கோரியது. இதற்கான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கீதாஞ்சலி கோயல் தலைமையில் நடைபெற்றபோது, சிறையில் உள்ள அமைச்சர் சத்தியேந்திர ஜெயினிடம் விசாரணை நடத்த அமலாக்க துறைக்கு அனுமதி வழங்கினர்.
இதனை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் திகார் சிறையில் வைத்து மது கொள்கை தொடர்பாகவும் சட்ட விரோதமாக பணம் கைப்பற்றது தொடர்பாகவும் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர். திகார் சிறையில் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று காலை முதல் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் 40 இடங்களில் அமலாக்கத் துறையினர் இவ்வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர்.
இதே வழக்கில் கடந்த 6ம் தேதி டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் 45 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது