Published : 12,Sep 2022 02:09 PM

``ஆளுநரான பின், என்ன செஞ்சீங்கனு கேட்பவங்களுக்கு இதான் பதில்!”- தமிழிசை பிரத்யேக பேட்டி

current-Governor-of-Telangana-and-Lieutenant-Governor-of-Puducherry-tamilisai-soundarajan-interview

புதியதலைமுறையின் ’வைகறை வணக்கம் ’பகுதிக்கு நமது நிருபர் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனை எடுத்த நேரலையின் எழுத்து வடிவம் இங்கே..

நிருபர் – தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் என இரண்டு பெரிய பொறுப்பில் இருக்கிறீர்கள்.. காலையில் டெல்லி, மதியம் தெலுங்கானா, மாலை புதுச்சேரியில் கோப்புகளைப் பார்த்துவிட்டு சென்னை கிளம்புகிறீர்கள். இது எப்படி உங்களுக்குச் சாத்தியமாகுகிறது?

தமிழிசை சௌந்தரராஜன் – வேலையில் சத்தியமாக இருக்கவேண்டும் என்று நினைத்தால் இது சாத்தியம் தான். எனக்கென்று ஒரு பணி கொடுக்கும் போது அதைச் சிறப்பாகச் செய்வது மட்டும்தான் என் எண்ணமாக இருக்கும். உதாரணத்துக்கு, நான் பள்ளி படிக்கும் போது இன்ஸ்பெக்ஸன் செய்ய அதிகாரிகள் வருவர். அப்போது, என் ரெக்கார்ட் நோட்தான் வகுப்பிலேயே பெஸ்டாக இருக்க வேண்டும் என ரொம்ப நேரம் செலவழித்து வேலை பார்ப்பேன். எனக்கு எந்த வேலை கொடுத்தாலும் அது மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு வேறுபட்டுச் சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பேன்.

அந்த எண்ணம் சின்ன வயதிலிருந்து இப்போதுவரை தொடர்கிறது. அதே மாறி தான் நான் மருத்துவராக இருந்த போது, ’உங்கள மாறி ஒரு ஸ்கேன் டாக்டரை பார்க்க முடியாது’னு சொல்லுவாங்க.. ஸ்கேன் தொடர்பான  நிறைய ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பேன். அந்த அளவுக்கு வேலை தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருப்பேன். 

எந்த நிலையிலிருந்தாலும் பெஸ்டாக இருக்க வேண்டுமென்று நினைப்பேன்.

image

சாதாரணமாக இருப்பது பெரிய விஷயமில்லை. அசாதாரணமாக இருப்பது தான் பெரிய விஷயம். இரண்டு மாநிலங்களுக்குப் பொறுப்பு கொடுத்திருக்கும் போது, எந்த மாநிலத்திலும் வேலை குறைவில்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் இயக்குகிறது. என்னை சந்திக்கும் எல்லோரையும் சந்தோசமா வைச்சுக்கனும் என்ற எனர்ஜியை எனக்கு நானே கொடுத்துக்கொள்கிறேன்.

நிருபர்- நீங்க புதுச்சேரிக்கு ஆளுநரா பொறுப்பேற்ற நேரத்தில் தான் கொரோனாவின் தாக்கம் புதுச்சேரியில் கடுமையா இருந்தது. அந்த சூழலை நீங்க சிறப்பா கையாண்டிருந்தீர்கள்.. ஒரு மருத்துவர் என்பதால் அந்த சூழலில் சிறப்பாகச் செயல்பட முடிந்ததா? அல்லது உங்களுடைய நிர்வாகத் திறமையினால் சிறப்பாக செயல்பட முடிந்ததா? உங்கள் பார்வை என்ன?

தமிழிசை – இரண்டுமே தான். மருத்துவர் என்பதால் நிர்வாகத் திறனைச் சரியாக செயல்படுத்த முடிந்தது என்று சொல்லலாம். மருத்துவர் என்பதால் மற்றவர்களை விடச் சிறப்பான நிர்வாகத்தைச் செயல்படுத்த முடிந்தது. அதனால் புதுச்சேரி மாடலை உருவாக்க முடிந்தது. மற்ற மாநிலங்கள் ஊரடங்கு, வெளி வியாபாரிகளுக்கு அனுமதி தடை என்று போட்ட போது கூட இங்கு வியாபாரிகளுக்கு தனி இடம் கொடுத்தோம். ஒரு ரூபாய்க்கு மாஸ்க் கொடுத்தோம். இப்படி தான் நிர்வாகத்தில் ஜெயிக்க முடிந்தது. பெட்ரோல் விலை முதலில் குறைந்ததும், கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து சிறப்பாகச் செயல்பட்டோம். ஆளுநரான பின்பு என்ன செய்தாங்கனு கேட்டுட்டே இருப்பவர்களுக்கு இதான் பதில்.

நிருபர் – ஆளுநர் மாளிகை என்பது குட்டி அரண்மனை தான். புதுச்சேரியில் சின்ன அரண்மனை, தெலுங்கானாவில் பெரிய அரண்மனை. சமையல் வேலைகளுக்கு நிறைய வேலை ஆட்கள் இருப்பார்கள். உணவு விசயத்தில் நீங்கள் எப்படி?

தமிழிசை- எனக்கு சின்ன வயதிலிருந்தே சமையல்கட்டுக்குப் போகும் பழக்கமே கிடையாது. சமையல் மேடையை விட வேற மேடைகள் தான் எனக்கானவை என்று என் அம்மா வளர்த்தார்கள். சமையல் பண்ணச் சொன்னதே இல்லை. எனக்கும் விருப்பமும், ஆர்வமும் இருந்ததே இல்லை. நான் Foodie-யும் கிடையாது. பசிக்கு இருப்பதைச் சாப்பிடுவேன். நாம கரண்சியை எண்ணுகிறோம் ஆனால் கலோரிகளை எண்ணுவதில்லை. அதனால் கலோரிகளை எண்ணிச் சாப்பிட்டு பிட்டாக இருக்க வேண்டும். கவலையான விசயம் என்னென்னா.. என்னால் சமைத்து போட முடியாது. நல்லா சமைக்கச் சொல்லி விருந்து தரேன்.. யார் வேண்டுமான் வரலாம்.

 image

நிருபர் – உடை விஷயத்தில் நீங்கள் எப்படி?

தமிழிசை- உடை விஷயத்தில் எனக்கு அதிக ஆர்வம் என்று எல்லோருக்குமே தெரியும். எல்லாத்தையும் மேட்ச்சா அணிய வேண்டும் என நினைப்பேன். ஆள் பாதி ஆடை பாதி என்பதை நான் ரொம்ப நம்புகிறேன். சின்ன வயதிலிருந்தே பல கேலிகளைக் கடந்து வந்திருக்கிறேன். ஆனால் ஒரு நாள் கூட என் நிறத்துக்காக நான் கவலைப்பட்டது கிடையாது. தோற்றத்தைப் பற்றி கவலைப்பட்டது கிடையாது.. ஆனால் தோற்றத்தை எப்படி வெளிப்படுத்திக்கனும் என்பதை தான் கவனிப்பேன். 

இப்போ கடைகளுக்குப் போக முடியவில்லை. ஆனால் முன்பெல்லாம் டென்சனாகும் போது ஷாப்பிங் போய்விடுவேன். நேர்த்தியா உடை அணிவது ஒரு உற்சாகத்தைக் கொடுக்கிறது.

நிருபர் – உங்கள் பெயரிலேயே இசை இருக்கிறது. உங்களுக்கு எந்த மாறியான இசை பிடிக்கும்?

தமிழிசை- இசையால் முடியாதது எதுவுமே இல்லை. அதேபோல், தமிழிசையாலும் முடியாதது எதுவும் இல்லை. சினிமா பார்க்கும் பழக்கம் ரொம்ப கிடையாது. அர்த்தமுள்ள இசைகள் பிடிக்கும். அர்த்தமுள்ள பாடல் கேட்கும் போது வரிகள் ரசிப்பேன். அதனால் தான் நா.முத்துக்குமார் மறைவுக்கு ரொம்பவும் வருத்தப்பட்டேன்.

image

நிருபர் – ஆளுநராக இருந்தாலும் இன்றளவு உங்களை எல்லோரும் அக்கா என்று தான் அழைக்கிறார்கள். அதை எப்படி எடுத்துக்கொள்றீங்க?

தமிழிசை-  எனக்கு பிடித்தமான அழைப்பு அது தான். தலைவர், தலைவின்னு கூப்பிடுவதை விட இது தான் எனக்கு பிடிக்கும். எப்போதும் ஒரேமாறியாக இருப்பது தான் நான். தமிழ் பேசுபவர்கள் என்னை அக்கானு கூப்பிடுவது இயல்பான ஒன்று. ஆனால் தெலுங்கு பேசுபவர்கள் அக்கான்னு கூப்பிடுவது மனதுக்கு ரொம்ப மகிழ்ச்சியை தருது.

எல்லோரிடமும் அன்புடன், நட்புடன் பழகுவதை விட வேற என்ன இருக்கு இந்த வாழ்க்கையில்.. இதைத் தாண்டி வாழ்க்கையில் என்ன சாதிக்கப் போகிறோம்? 

வீடியோ வடிவில் இப்பேட்டியை இங்கே காணலாம்:

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்