Published : 19,Sep 2017 10:34 AM
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி: அமைச்சர் உதயகுமார்

சென்னையில் டிசம்பரில் நடைபெற உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரித்துள்ளார்.
அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், “டிசம்பரில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை பரப்புவதை தினகரன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் பல்வேறு தகவல்களை நாங்கள் வெளியிட வேண்டிய நிலை ஏற்படும். அதிமுக ஆட்சிக்கு வர தினகரன் ஓட்டு கேட்கவில்லை, உரிமை கோர அவருக்கு உரிமையில்லை” என்று கூறினார்.
மேலும், “சபாநாயகரின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல முடியாது. சபாநாயகரின் தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்று ஒருமித்த கருத்து அடிப்படையில் செயல்படுகிறோம். மூத்த நிர்வாகிகள் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு கட்சியை பாதுகாப்போம். ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் சில நியமனங்கள் நடந்தன. கட்சியை யார் வழிநடத்துவது என்பதை தீர்மானங்கள் மூலம் முடிவு செய்திருக்கிறோம். அமைச்சரவைக்கு சொந்தக்காரர் ஜெயலலிதா மட்டுமே, எனவே அவரது அரசைக் காப்போம். உடல்நிலையை பொருட்படுத்தாமல அதிமுகவை மீண்டும் வெற்றி பெற செய்தவர் ஜெயலலிதா. அதிமுக நிர்வாகிகளின் பதவிகள் அனைத்தும் ஜெயலலிதா உழைப்பில் தரப்பட்டவை” என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.