Published : 10,Sep 2022 10:42 PM

வாழ்க்கையை வாழத்தான் சிந்திக்கணும்.. ”தி ஷாஷங்க் ரிடெம்சன்” படம் நம்பிக்கையின் நீரூற்று!

You-have-to-think-about-living-life----The-Shashank-Redemption--movie-is-a-fountain-of-hope-

கொரோனோ கால கட்டத்திற்கு பிறகான வாழ்க்கையில் மனித சமுதாயத்திற்கான நெருக்கடிகள் இன்னும் கூடிவிட்டதாகவே தெரிகிறது. பெருகிவரும் தற்கொலை தொடர்பான செய்திகள் ஒருவகையில் அதற்கான சான்றாகவே இருக்கின்றன. அதாவது வாழவே முடியாத அளவிற்கு நெருக்கடிகள் முற்றிவிடும் போது உச்சக்கட்ட எண்ணத்தில்தான் பலரும் இத்தகைய விபரீத முடிவுகளை எடுத்துவிடுகின்றனர். சிலர் மிகவும் அற்பமான காரணங்களுக்காகவே ஒரு நொடியில் முடிவெடுத்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். தற்கொலை என்பதை பொறுத்தவரை பொதுவான அது தனிநபரின் தனிப்பட்ட பிரச்னை என்பதாகவே எல்லோரும் சொல்லி வருகிறார்கள். ஒருவரது மனதின் தாங்கி கொள்ளும் வலிமையை பொறுத்ததே என்று அதனை சுருக்கிவிடுகின்றனர். ஆனால், வாழவே முடியாத சூழலை உருவாக்கிய சமூக நெருக்கடிகளின் பாத்திரம், வாழ்க்கையை பற்றிய புரிதலை உண்டாக்காத சமூகத்தின் அலட்சியம் இவையெல்லாம் ஒருவகையில் தற்கொலைகளுக்கான சமூக காரணிகளே.

Focus on mental health to curb suicides | Deccan Herald

அவநம்பிக்கைகள் இத்தகைய விபரீத முடிவுகளை எடுக்க காரணங்களாக அமையும் பட்சத்தில் நம்பிக்கையை விதைக்க வேண்டிய கடமை சமூகத்திற்கு இருக்கிறது. அதுவும் சமூகத்தின் கருத்து ஆக்கத்திற்கான முக்கிய கருவியாக விளங்கும் சினிமாக்களுக்கும் தவிர்க்க முடியாத பங்கு இருக்கிறது. ஆனால், நம்முடைய சினிமாக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது. ஒரு கலைப்படைப்பானது மனித வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சக் கூடியதாக இருக்க வேண்டும். வாழ்வில் வரும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டி அந்த நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினையாக கலைப் படைப்புகள் உருவாக வேண்டும். ஆனால், மிகவும் பலவீனமான கதாபாத்திரங்களை, நம்பகத்தன்மையற்ற அசாத்தியமான கதாபாத்திரங்களையே சினிமாக்கள் உருவாக்குகின்றன. அந்த வகையில்தான் நம்பிக்கையை அளவற்ற வகையில் அள்ளிக்கொடுத்த ஒரு அற்புதமான கலைச் சித்திரமான ’த ஷாஷங்க் ரிடெம்ப்சன்’ (The Shawshank Redemption) என்ற அமெரிக்க திரைப்படம் குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

image

படத்தின் பாதியில் இந்த காட்சி வரும். கைதியாக உள்ளே சென்று பின் சிறையில் நூலகத்தை பராமரிக்கும் பொறுப்பை மேற்கொண்டு வந்த முதியவரான ப்ரூக்ஸ் ஹாட்லேன்க்கு விடுதலை கிடைத்துவிடும். அவர் சிறையில் விருப்பமில்லாமலே வெளியே வருவார். ’இந்த வயசுக்கு மேல் நான் வெளியே சென்று என்ன செய்யப் போகிறேன். மீதி நாட்களையும் சிறையிலேயே கழித்துவிடுகிறேன். வெளியே என்ன செய்வதென்றே எனக்கு தெரியாது’ என சிறையில் இருந்து கிளம்புவதற்கு முன்பு புலம்புவார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு ஒரு அறையில் செய்வதற்கு ஒரு கடையில் வேலையும் கிடைக்கும். ஆனால், தனிமை அவரை ஆட்கொண்டுவிடும். பேசுவதற்கு கூட அவருக்கு யாரும் இருக்கமாட்டார்கள். சிறையில் அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியில் நீண்ட காலம் வாழ்ந்தவர் தற்போது தனிமை சிறையில் மாட்டிக் கொண்டார். இரவுகள் பல தூக்கமில்லாமல் கழிப்பார். பல கேள்விகள் அவரை சூழ்ந்துகொள்ளும். முதுமையின் தனிமை எல்லாவற்றிலும் மிகவும் கொடுமையானது அல்லவா! திடீரென ஒருநாள் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வார். அவர் தற்கொலை முடிவை எடுக்கும் போது நமக்கே மிகவும் வருத்தமாக இருக்கும். இயக்குநர் மேல் அதீத கோபமும் வரும். அவ்வளவு ஜாலியான ஒரு கதாபாத்திரத்தை இப்படி தனிமையில் வாடவிட்டு கொன்றுவிட்டாரே என்று! அவருக்கு வேறு முடிவு கொடுத்திருக்கலாம் அல்லவா! அவர் சிந்தித்தபடி மீண்டும் ஒரு தவறு செய்துவிட்டு சிறைக்கு கூட சென்றிருக்கலாமே என்று நமக்கு தோன்றும். ஆனால், இயக்குநர் அந்த காட்சிகளை ஏன் வைத்தார் என்பது படத்தின் இறுதியில் அதேபோன்ற காட்சிகள் மற்றொரு கதாபாத்திரத்திற்கு திரும்பவும் நடக்கும் போதுதான் புரியவரும். நெஞ்சில் பசுமரத்தாணி போல் வாழ்க்கையின் அர்த்தமும் பதிந்திடும்.

image

அந்த மற்றொரு கதாபாத்திரம் எல்லிஸ் பாய்ட். கிட்டத்தட்ட ஷாவ்ஷாங்க் சிறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் கழித்தவர். ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒருமுறை பரோல் வழங்குவதற்காக விசாரணை நடக்கும். ஆனால், ஒவ்வொரு முறையும் எல்லிஸ் பாய்ட்க்கு பரோல் மறுக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். ஒரு வழியாக 40வது ஆண்டில் அவருக்கு பரோல் கொடுத்துவிடுவார்கள். அப்போது அவர் 60 வயதினை கடந்திருப்பார். வாழ வேண்டிய வாழ்க்கையில் முக்கியமான வயது எல்லாமே கடந்து போயிருக்கும். எல்லிஸ்க்கும் பரூக்ஸ் போலவே ஒரு வேலையும், தங்குவதற்கு இடமும் கிடைக்கும். அவரும் வேலை செய்து கொண்டே இருப்பார். தனி அறை.. யாருமில்லா தனிமை. தற்கொலை எண்ணங்கள் மீண்டும் அவரை ஆட்கொண்டுவிடும். என்ன செய்வதென்று தெரியாமல் அவர் முழிப்பார். இந்த இடத்தில்தான் அவர் தற்கொலை முடிவை கைவிட்டு வேறொரு முடிவை எடுப்பார். எப்படியாவது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் தழைத்தோங்கும். அதற்கு முக்கிய காரணம்தான் படத்தின் மைய கதாபாத்திரமான ஆண்ட்ரூ. அவன் கொடுத்த பொன்னான வார்த்தைகள் தான் எல்லிஸை தற்கொலை முடிவில் இருந்து வெளியேற்றியது.

image

வாழ்க்கையில் இரண்டு விஷயங்களுக்காக மட்டுமே யோசிக்க வேண்டும். ஒன்று மரணத்தை தழுவுவதற்காக மற்றொன்று எப்படியாவது வாழ வேண்டும் என்பதற்காக. முதலில் நூலக பொறுப்பாளரான ப்ரூக்ஸ் மரணத்தை தழுவ வேண்டும் என்ற முடிவை எடுத்தார். ஆனால், எல்லிஸ் வாழ்க்கையை எப்படியாவது வாழ வேண்டும், சிறகாய் பறந்து செல்ல வேண்டும் என்ற முடிவினை எடுத்தார்.

image

ஆண்ட்ரூ கதாபாத்திரம் நம்பிக்கையின் ஊற்றாக தெரியும். யதார்த்தத்தை துல்லியமாக புரிந்து கொண்டு எப்படி செயல்களை வகுத்துக் கொள்வது என்பதை அந்த கதாபாத்திரத்தில் இருந்து நாம் மிகப்பெரிய பாடமே கற்றுக் கொள்ளலாம். படத்தின் இறுதி காட்சிகளுக்கு சில காட்சிகளுக்கு முன்பு வரை சாதாரணமான படமாக தோன்றிக் கொண்டிருந்த நமக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்திருப்பார் இயக்குநர். ஆண்ட்ரூ கதாபாத்திரத்தை அவர் அப்படி செதுக்கி இருப்பார். வாழ்க்கை நம்மை இருளில் தள்ளும் போது, அடுத்து கண்களுக்கு எட்டியவரை எந்த வழியுமே தெரியாத அந்த தருணத்தில் எப்படி வாழ்க்கையை வெளிச்சத்திற்கான பாதையை உருவாக்குவதற்கு அங்குலம் அங்குலமாக ஒவ்வொரு அடியாக மேற்கொள்ள வேண்டும் என்பதை பளீச்சென்று இறுதியில் நமக்கு ஆண்ட்ரூ கதாபாத்திரம் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லும். வாழ்க்கை குறித்த அந்த கதாபாத்திரத்தின் புரிதல் அளப்பரியது.

image

ஆண்ட்ரூ தனிப்பட்ட தன்னுடைய விடுதலையை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட மாட்டான். சிறையில் உள்ள அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கையின் கீற்றை பாய்ச்சிக் கொண்டே இருப்பான். நூலத்தை உருவாக்கி அவர்களது வாழ்க்கையை மாற்றுவான். எல்லோரையும் படிக்க வைக்க முயற்சிப்பான். தனக்கு கிடைக்கும் சலுகைகளை எல்லோருக்கும் பயன்படும்படி செய்துகொண்டே இருப்பான். சிறையில் இருந்து தப்பிப்பதற்கான தருணம் வரும் வரை அந்த சிறையில் மிகப்பெரிய காரியங்களை சாதித்து இருப்பான். ஆனால், இதெல்லாம் ஒருநாளில், ஒரு முயற்சியில் செய்துவிடவில்லை. புத்தகம் வேண்டுமென அரசுக்கு ஓயாமல் கடிதம் அனுப்பிக் கொண்டே இருந்து ஒரு கட்டத்தில் சிறை நூலகத்திற்கு ஆயிரக்கணக்கான புத்தங்களை வரவைத்து பெயர் பெற்ற நூலகமாக மாற்றிவிடுவான். அவ்வளவு நம்பிக்கையான, எல்லோருடைய சந்தோஷத்தையும் மனதில் வைத்திருக்கும் கதாபாத்திரம்தான். ஆண்ட்ரூ.

image

படத்தின் ஒருகாட்சியில் சிறை வளாகத்தின் ஒரு அறையில் அறிவிப்பு மைக் அவன் அருகில் இருக்கும். அப்போது ஒரு அழகான பாடல் ஒன்றினை சிறைவாசிகள் எல்லோரும் கேட்கும் படி அவன் செய்வான். அதாவது அதிகாரிகளின் வெறுப்பையும் அடுத்து கிடைக்கப் போகும் தண்டனைகளையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் எல்லோருக்கும் அந்த இசை சென்றுசேர வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஸ்க் எடுத்து செய்வான். அவனும் மெய்மறந்துகேட்பான். அந்த இசையை கேட்ட எல்லீஸ் சொல்வார். அந்த பாடலுக்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை. ஆனால், அது ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுத்ததுபோல் இருக்கிறது என்று. ஆம், ஒட்டுமொத்தமாக இந்தப் படமும் நமக்கும் கொடுப்பது நம்பிக்கையின் வீரியமான விதையைத்தான். வாழ்க்கையில் நெருக்கடியான நேரங்களில் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற ஒன்றினை பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்லிட்டு செல்கிறது இந்தப் படம்.

(இன்று தற்கொலை தடுப்பு தினம்)

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்