Published : 09,Sep 2022 10:28 AM

சுவாரஸ்யமில்லா இந்த எமோஷனல் டைம் ட்ராவல், உங்கள் வாழ்வையே மாற்றும்!? `கணம்’ - விமர்சனம்

Sharvanad-Amala-starring-Kanam-movie-review

வாழ்வில் ஒரு செகண்ட் சான்ஸ் கிடைத்தால் என ஏங்கும் ஹீரோவுக்கு டைம் மெஷின் கிடைத்தால்...!

ஆதி (ஷர்வானந்த்) ஒரு இசைக்கலைஞர், பாண்டி (ரமேஷ் திலக்) ஒரு வீட்டுத் தரகர், கதிர் (சதீஷ்) நல்ல வேலையில் இருந்தாலும், திருமணத்துக்கு மணப்பெண் கிடைக்காமல் விரக்தியில் இருக்கிறார். ஷர்வானந்துக்கு இருக்கும் ஒரு பயத்தாலும், சிறுவயதிலேயே இறந்து போன தன் தாயின் இழப்பில் இருந்து வெளியே வரமுடியாமலும் தவிக்கிறார். இதே போல் ரமேஷ் திலக், சதீஷ் இருவருக்கும் வாழ்வில் சில பிரச்சனைகள். இந்தப் பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வை மூவரும் தேடிக் கொண்டிருக்கும் போது சைன்டிஸ்ட் ரங்கி குட்டப்பால் (நாசர்) மூலம் ஒரு தீர்வு தேடி வருகிறது. அதுதான் டைம் மிஷின்.

image

இந்த மூவருக்கும் நிகழ்காலப் பிரச்சனைகளை எல்லாம் கடந்த காலத்திற்கு சென்றால் மாற்றிவிடலாம் என்று தோன்ற, அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி 1998க்கு செல்கின்றனர். அவர்களின் காலப்பயணம் கை கொடுத்ததா? திரும்பி நிகழ்காலத்துக்கு வந்தார்களா? பிரச்சனைகள் சரியானதா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

டைம் ட்ராவல் கதை தமிழ்சினிமாவுக்கு புதுசு கிடையாது என்றாலும், இந்த முறை அந்த ஜானரை மிக எமோஷனலான பயணமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீகார்த்திக். ஒரு டைம் ட்ராவல் ஜானர் படத்திற்குள் மிக அழகாக உணர்வுகளைப் புகுத்தி கொடுத்திருந்த ரைட்டிங் சில இடங்களில் கை கொடுத்திருக்கிறது.

image

ஷர்வானந்த் நடிப்பு ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுந்தது. சில எமோஷனலான காட்சிகள் தவிர, அவரது மன ஓட்டம் என்ன என்பதை நடிப்பில் வெளிப்படுத்த தவறி இருக்கிறார். ஆனாலும் ஒரு டீசன்டான பர்ஃபாமன்ஸை கொடுத்திருக்கிறார். நண்பர்களாக வரும் ரமேஷ் திலக், சதீஷ் இருவரும் தங்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். டப்பிங்கில் இணைத்து படத்தில் துருத்திக் கொண்டிருந்த சில வசனங்களை சதீஷ் தவிர்த்திருக்கலாம்.

நாசர் தனது நடிப்பாலேயே வயோதிகத்தை வெளிப்படுத்துகிறார். ஆனால் அவரது மேக்கப் தான் சற்று உறுத்தலாகத் தெரிந்தது. படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் அமலா நடித்திருக்கிறார். முடிந்த வரை அந்த கதாபாத்திரத்திற்கான நியாயத்தை செய்திருக்கிறார். ரித்து வர்மாவிற்கு மிக சிறிய வேடம், கதையில் அவரது ரோல் குறைவு என்பதால் கவனிக்கப்படாமல் போகிறார். ஷர்வானந்த், ரமேஷ் திலக், சதீஷ் ஆகியோரின் சிறுவயது கதாபாத்திரங்களாக வரும் ஜே, நித்யா, ஹிதேஷ் ஆகியோரும் மிக சிறப்பான தேர்வு. அருமையாக நடித்திருக்கிறார்கள்.

image

கடந்த காலத்துக்கு வரும் ஹீரோவும் அவரது நண்பர்களும் தங்களின் சிறு வயது வெர்ஷன்களை சந்திப்பது, அவர்களிடம் பேசுவது என ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும் படி உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். டிவியில் ஓடும் வாஷிங் பவுடர் விளம்பரத்தை ரசித்து பார்ப்பதில் ஆரம்பித்து பல 90ஸ் கிட்ஸ் ரெஃபரன்ஸ் அட்டகாசம். படத்தின் இடைவேளையில் வரும் அந்த திருப்பமும் மிக சுவாரஸ்யமாக இருந்தது.

சுஜித் சாரங் ஒளிப்பதிவு படத்தை மிக குவாலிட்டியாக கொடுத்திருக்கிறது. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அழகாக படத்துடன் பொருந்திப் போகிறது. சிஜி, கிராஃபிக்ஸ் என படம் டெக்னிகலாக மிக தரமானதாக வந்திருக்கிறது.

image

படத்தின் குறைகள் என்று பார்த்தால் இது முழுக்க முழுக்க எமோஷனல் படமாக மட்டும் நகர்வதால் பெரிய சவால்கள் என்று எதுவும் இல்லை. எனவே அம்மா சென்டிமென்ட் தாண்டி கதையில் எந்த பரபரப்பும் இல்லை. மிக எளிமையாக கதை சொல்வது எல்லாம் ஓக்கே, ஆனால் கதையில் எதாவது ஒரு சுவாரஸ்யம் இருந்தால் தான் பார்வையாளர்களின் ஆர்வத்தை படம் தக்க வைக்கும்.

படம் துவங்கி நாசரும் - ஷர்வானந்த் சந்திக்கும் வரை பொறுமையாக நகரும் திரைக்கதை, அதற்குப்பின் கொஞ்சம் வேகம் எடுக்கிறது. அதன் பின் மறுபடியும் எந்த விறுவிறுப்பும் இன்றி தேங்க ஆரம்பித்துவிடுகிறது. ஆனாலும் படத்தின் இறுதியில், உங்கள் வாழ்வை மாற்ற டைம்ட்ராவல் எல்லாம் தேவை இல்லை, இந்த கணம் நீங்கள் நினைத்தால் உங்கள் வாழ்வை மாற்றலாம் என்று சொன்ன மெசேஜ் சிறப்பு.

image

கதையில் இன்னும் விறுவிறுப்பான இடங்களையும், சுவாரஸ்யமான சவால்களையும் சேர்ந்திருந்தால், இன்னும் ரசிக்கும் படி இருந்திருக்கும் இந்த 'கணம்'.

-ஜான்சன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்