Published : 06,Sep 2022 06:44 PM

”என்ன குறுஞ்செய்தி விராட் கோலிக்கு வேண்டும்?”.. தோனி குறித்த கருத்துக்கு கவாஸ்கர் காட்டம்!

BCCI-official-slams-Virat-Kohli-after-ex-skipper-s-SENSATIONAL-revelation-Sunil-Gavaskar-says-THIS

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகிய போது, தன்னை தோனி மட்டுமே தொடர்புக் கொண்டதாக, மூத்த வீரரான விராட் கோலி கவலை தெரிவித்தநிலையில், அதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, மொத்தம் 3 போட்டிகளில் விளையாடி 154 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 2 அரைச் சதங்களும் எடுத்துள்ளார்.

இதற்கிடையில் தோனி குறித்த கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி, “டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து நான் விலகியபோது, என்னுடன் விளையாடியவா்களிலேயே தோனி மட்டும் தான் என்னைத் தொடா்புக் கொண்டாா். அவரிடமிருந்து மட்டுமே எனக்கு குறுந்தகவல் வந்தது. பலா் தொலைக்காட்சிகளில் எனக்கு பரிந்துரை செய்துகொண்டிருந்தாா்கள். பலரிடம் எனது தொலைபேசி எண் இருந்தாலும் அவா்கள், அப்போது என்னை யாரும் தொடா்புக் கொள்ளவில்லை” என விராட் கோலி கூறியிருந்தார். விராட் கோலியின் இந்த கருத்திற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் தற்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.

image

அதில், “இந்திய கிரிக்கெட் அணியின் அப்போதைய டிரெஸ்ஸிங் ரூமின் சூழ்நிலைப் பற்றி எனக்கு தெரியாது. கோலியுடன் ஒருவர் மட்டுமே தொடர்பில் இருந்தார் என்றால் தொடர்புகொள்ளாத மற்ற வீரர்களின் பெயர்களையும் சொல்ல வேண்டும். எல்லோரும் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என்று நினைப்பதை விட, சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அது கொஞ்சம் நியாயமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “என்ன குறுஞ்செய்தி விராட் கோலிக்கு வேண்டும்? அவரை ஊக்குவிக்க வேண்டுமா? கேப்டன்சி முடிந்தப் பிறகு எதற்கு பாராட்டு? கேப்டன்சி பொறுப்பு அப்போதே முடிந்து விட்டது. தற்போது கிரிக்கெட் வீரராக மட்டுமே விளையாடுகிறீர்கள். அதனால் அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். கேப்டனாக இருக்கும்போது பிற வீரர்கள் பற்றி கவலைப்படலாம். ஆனால் தற்போது அந்த கேப்டன்சி பகுதி முடிந்தப் பிறகு அவருடைய சொந்த ஆட்டத்தில்தான் கவனம் செலுத்த வேண்டும். நான் 1985-ல் கேப்டன்சி பதவியிலிருந்து விலகினேன். அந்த இரவு எல்லோருமாக சேர்ந்து கொண்டாடினோம். ஒருவரையொருவர் கட்டிப்பிடித்துத் தழுவிக்கொண்டோம். இதற்கு மேல் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

image

இந்நிலையில் விராட் கோலியின் கருத்தை, பிசிசிஐ-யின் மூத்த நிர்வாகி கடுமையாக விமர்சித்துள்ளார். இன்சைடு ஸ்போர்ட்ஸ் இணையதளத்துக்கு அவர் அளித்துள்ளப் பேட்டியில், “விராட் கோலிக்காக அனைவருமே துணை நின்றனர். சக வீரர்கள் முதல் பிசிசிஐ அதிகாரிகள் வரை அவருக்காக ஆதரவு கொடுத்தோம். ஆனால் தனக்கு யாருமே ஆதரவு தரவில்லை எனக்கூறுவது உண்மைக்கு புறம்பானது. விராட் கோலி புத்துணர்ச்சி பெறுவதற்காக தொடர்ச்சியாக ஓய்வு கொடுக்கப்பட்டது. விராட் கோலி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய போது, அனைத்து பிசிசிஐ நிர்வாகிகளும், சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கூறி வந்தனர். அவர் தற்போது ஏன் இப்படி பேசுகிறார் என்பது எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்