வேலைசெய்யும் நிறுவனத்திலேயே லட்சக்கணக்கில் கொள்ளையடித்து நாடகம் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

வேலைசெய்யும் நிறுவனத்திலேயே லட்சக்கணக்கில் கொள்ளையடித்து நாடகம் - காட்டிக்கொடுத்த சிசிடிவி
வேலைசெய்யும் நிறுவனத்திலேயே லட்சக்கணக்கில் கொள்ளையடித்து நாடகம் - காட்டிக்கொடுத்த சிசிடிவி

தனது கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டு தான் பணிபுரியும் பட்டய கணக்கியல் நிறுவனத்திலிருந்து ரூ.13.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்த ஊழியர் போலீசாரிடம் வசமாக சிக்கிக்கொண்டார். எப்படி? பார்க்கலாம்.

மும்பையிலுள்ள முலுந்த் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பி.கே சாலையிலுள்ள பட்டய கணக்கியல் நிறுவனத்தில் பணிபுரிபவர் சுமித் வடேகர். இவர் சனிக்கிழமை மதியம் தங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளார்களிடமிருந்து பணத்தை சேகரித்துவிட்டு அலுவலகம் திரும்பினார். அப்போது அங்குவந்த மர்ம நபர் ஒருவர் குளோராஃபார்ம் தடவிய கைக்குட்டையை வடேகரின் முகத்தில் வைத்து அழுத்தியதில் அவர் மயங்கிவிழுந்தார். பின்னர் அவரிடமிருந்த ரூ.13.75 லட்சம் பணத்தை கொள்ளையடித்து அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பிச்சென்றார். சற்று நேரத்தில் அங்குவந்த வடேகருடன் பணிபுரியும் ஊழியர், வடேகர் மாடிப்படியில் மயங்கிக்கிடப்பதை பார்த்து அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். உடனே வடேகரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்நிறுவன உரிமையாளர் சிதார்த் ஷா புகாரளித்தார். அதன்பேரில் முலுந்த் போலீசார் நிறுவனத்திற்குச் சென்று, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வடேகரும் அந்த மர்ம நபரும் ஒன்றாக அலுவலகத்திற்குள் நுழைகின்றனர். சில அடிகள் முன்பாகச் சென்ற வடேகர், பின்புறம் திரும்பிப் பார்த்து அந்த நபரிடம் சைகை மொழியில் தொடர்புகொள்கிறார். பின்னர் அந்த மர்ம நபர் குளோரோஃபார்ம் ஸ்ப்ரேவை கைக்குட்டையில் ஊற்றி அதனை பைக்குள் வைக்கிறார். பின்னரே தொடர்ந்துவந்து வடேகரின் முகத்தில் அதை வைத்து மயக்கமடைய செய்கிறார்.

இந்த காட்சிகளைப் பார்த்தபிறகு போலீசாரின் சந்தேகம் வடேகரின் பக்கம் திரும்பியது. அவரிடம் விசாரணை நடத்தியதில், தனது பணத் தேவை இருந்தததையும், அதனால் தனது நண்பருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டதையும் ஒத்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து வடேகரும், அவரது கூட்டாளியும் தற்போது கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளனர். அந்நிறுவன உரிமையாளர் சிதார்த் ஷாவின் புகாரின்பேரில், இருவர்மீதும் இந்திய சட்டப்பிரிவுகள் 392 மற்றும் 328-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com