Published : 06,Sep 2022 08:38 AM
நீலகிரி: சாலையில் உலாவரும் காட்டு யானைகள் - வாகனங்களை வழிமறிப்பதால் அச்சம்

கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வாகனங்களை வழிமறிக்கும் யானைகளால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அண்மைக் காலமாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் நான்காவது கொண்டை ஊசி வளைவில் பகல் நேரத்தில் தனது குட்டியுடன் இரண்டு யானைகள் சாலையில் உலா வந்து வாகனங்களை மறித்தன. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் சாலையில் உலா வரும் காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.