
ரவீந்திர ஜடேஜாவுக்கு காயம் தீவிரமானதாக இருப்பதால் அவரால் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதில் ஆல்-ரவுன்டர் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் கவனம் ஈர்த்தது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணி வெற்றி பெற கைகொடுத்தது.
அதைத் தொடர்ந்து ஹாங்காங் அணியுடனான போட்டியிலும் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக திகழ்ந்தார். இதனிடையே, வலது காலின் மூட்டு பகுதியில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக, ஜடேஜா நடப்பு ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக பிசிசிஐ தெரிவித்தது. ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக ஆசிய கோப்பை தொடரில் அக்சர் படேல் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக விரைவில் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவது சந்தேகமாகி உள்ளது. இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஜடேஜாவின் வலது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் தீவிரமாக உள்ளது. அதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.
அவர் மீண்டும் எப்போது அணிக்குத் திரும்புவார் என்பதை தற்போது கூற இயலாது. குறைந்தது அடுத்த 3 மாதத்திற்கு ஜடேஜாவால் கிரிக்கெட் விளையாட முடியாது. அவர் சிகிச்சை முடிந்து முழுவதும் குணமடைந்த பிறகு அணிக்குத் திரும்புவார்” என்றார்.
ஜடேஜா பந்து வீசும் போது அவரது வலது காலை தரையில் வேகமாக வைப்பதும் அவரது முழங்கால் காயத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து ஜடேஜா விலகுவது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: துவம்சம் செய்யப்போவது யார்? இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல்