Published : 03,Sep 2022 10:21 AM

மஷ்ரூம் பிரியர்களே கொஞ்சம் கவனியுங்க: தலைவலி முதல் கேன்சர் வரை.. காளானால் வரும் கோளாறு

side-effects-of-eating-mushrooms

காளான் பிடிக்காத ஃபுட்டீஸ்களே இருக்க மாட்டார்கள். ஸ்டார்ட்டர், மெயின் கோர்ஸ் என எல்லா படிநிலைகளிலும் சைவ பிரியர்களின் பிடித்தமான உணவாக காளான் வகை இருக்கும். ஈரப்பதமான மற்றும் வெப்பமான காலநிலைகளிலும் வளரும் இந்த காளான் உலகெங்கிலும் 1 லட்சத்து 40 ஆயிரம் வகைகளில் இருந்தாலும் அதில் 10 சதவிகிதம் மட்டுமே உண்ணக்கூடியதாக இருக்கின்றன.

சாப்பிடுவதற்கு மிகவும் ருசியாக இருக்கும் காளான்களில் ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருந்தாலும் அதிகளவில் இவற்றை உட்கொள்ளும் போது எண்ணற்ற உடல் உபாதைகளையே கொடுக்கிறது என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காளான்களை சமைப்பதற்கு முன்பு நன்றாக கழுவ வேண்டும் என்றும் அப்படி செய்யாவிட்டால் செரிமான பிரச்னைகளையே தரும் என்றும் எச்சரிக்கிறார்கள்.

இப்படி இருக்கையில், காளான் சாப்பிடுவதால் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் ஏற்படும் பிரச்னைகள் என்ன என்பது பற்றி டைம்ஸ் நவ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதை இங்கே காணலாம்:

சோர்வடையச்செய்யும்:

மஷ்ரூம் சாப்பிடும் பலருக்கும் சோர்வான நிலையையே கொடுக்குமாம். காளான் சாப்பிடுவதால் உடலளவில் ஒருவிதமான அசவுகரியமாக இருக்கவும், சோம்பேறித்தனத்தையும் ஏற்படுத்தும்.

image

செரிமான கோளாறு வரும்:

காளான் உணவுகளை உட்கொள்வதால் வயிற்றில் அசவுகரியமாக உணர வைக்கும், வயிற்றுப்போக்கு, வாந்தி, சில நேரங்களில் உடலில் தசைப்பிடிப்பையும் ஏற்படுத்தும். காளானில் உள்ள சைலோசைபின் என்ற வேதிப்பொருள் தொடர்ச்சியான குமட்டலை உண்டாக்கும்.

மாயப்பிம்பத்தை உணரச் செய்யும்:

காளானில் உள்ள சைலோசைபின் வேதிப்பொருளால் ஹால்லுசினேஷன் போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும். விவரிக்க முடியாத உணர்விலேயே இருக்கச் செய்யும். மஷ்ரூமால் ஒவ்வாமையை உணரும் பலருக்கும் இதை சாப்பிட்ட 10-15 நிமிடங்களிலேயே மேற்குறிப்பிட்ட உணர்வுகள் ஏற்படும். ஆனால் எல்லாருக்கும் இதுப்போன்று நிகழாது.

தோல் அலர்ஜி:

மஷ்ரூமில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்டால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்தாலும் உங்கள் உடல் அதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் தோலில் எரிச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகளை காட்டும். சமயங்களில் தொண்டையில் வறட்சியை கொடுக்கும். மூக்கில் இருந்து ரத்தம் வர வைக்கும்.

ஒற்றைத் தலைவலி:

காளான் உட்கொள்வதால் தலைவலி வருவதோடு மைக்ரேன் எனும் ஒற்றைத் தலைவலியையும் ஏற்படுத்தும். நைட்ரேட் ஆக்சைடின் அளவு காளான் சாப்பிடுவதால் அதிகரிப்பதால் தலைவலி வருமாம். சிலருக்கு தலைசுற்றல் கூட ஏற்படும்.

ALSO READ: 

தீராத ஒற்றைத் தலைவலியா? நிமிடங்களில் விடுபட இதை செய்தால் போதும்!

மன படபடப்பு உண்டாகும்:

மனநலம் குறித்த உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிடம் காளான் வகைகளை சாப்பிட வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதுண்டு. ஏனெனில் இதனால் ஆன்சைட்டி எனும் பதற்ற நிலை அதிகரிக்குமாம். அதிகளவில் காளான் சாப்பிடுவதால் பேனிக் அட்டாக் வருமாம். பூஞ்சையான காளானை சாப்பிடும் சிலருக்கு உடலில் ஒருவிதமான கூச்ச உணர்வும் வரும்.

உடல் எடையை கூட்டும்:

காளானில் உள்ள டிரிப்டமைன் என்ற வேதிப்பொருள் பசியைத் தூண்டும் போதைப்பொருளாக செயல்படுகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு குறிப்பிடத்தகுந்த உடல் எடையும் அதிகரிக்கிறது.

கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்:

காளான்களில் நார்ச்சத்து அதிகமாக இருந்தாலும், வளர்சிதை மாற்றக் கோளாறுகளை குறைக்க உதவினாலும் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு ஒவ்வாமை இருந்தால் அதனை சாப்பிடுவதை தவிர்க்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

மேலும், பச்சை காளான்களில் carcinogens எனும் புற்றுநோய்க்கான காரணிகள் இருக்கின்றனவாம். ஆகையால் கர்ப்பிணிகள், தாய்ப்பாலூட்டும் பெண்கள் சாப்பிட்டால் தாய்மார்களுக்கும் குழந்தைக்கும் புற்றுநோயை வரவைக்கும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளன.

ALSO READ: 

பிரேக்கப்பால் உடலிலும் மனதிலும் என்னவெல்லாம் மாற்றம் நிகழும் தெரியுமா?

குறிப்பு: உணவே மருந்து எனக் கூறப்பட்டாலும் அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பதை போல எந்த வகையான உணவாக இருந்தாலும் உங்களது உடல் நிலைக்கு கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் மருத்துவர்களின் உரிய ஆலோசனையை பெற்று அதனை சீர் செய்துக் கொள்வதே சாலச் சிறந்தது. மேலும், காய்கறிகளோ, இறைச்சிகளோ எதை சாப்பிட்டாலும் அவற்றை நன்றாக கழுவி, ஆவியில் வேகவைத்து சாப்பிடுவதுமே உடல் நலத்துக்கு நல்லது.