Published : 31,Aug 2022 08:14 PM

திமுக அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது; தேர்தல் அறிக்கையில் என்ன சொன்னீர்கள்-பி.ஆர்.பாண்டியன்

Tamil-Nadu-Federation-of-All-Farmers-Association-president-P-R-Pandian-Speech

நெல் விலையை உயர்த்தி இருப்பதாக திமுக அரசு அறிவித்திருப்பது ஒரு ஏமாற்று வேலை என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து தற்போது மூன்றாவது முறையாக காவேரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்னும் ஒரு வார காலத்திற்குள் ஆயிரம் டி.எம்.சி, காவிரி ஆற்றின் உபரி நீர், கடலில் கலக்கும் நிலை உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூரில் தொடங்கி தஞ்சை மாவட்டம் வல்லம் வரை செல்லும் கட்டளை மேட்டு வாய்க்காலில் இதுவரை தண்ணீர் திறக்கப்படவில்லை. கட்டளை மேட்டு வாய்க்கால் மூலமாக தண்ணீர் சென்று சேர வேண்டிய நூற்றுக்கணக்கான ஏரி, குளங்களுக்கு காய்ந்து கிடக்கின்றன.

வழக்கமாக அக்டோபர் மாதம் தான் தண்ணீர் திறப்போம் என்கிறார்கள். மணல் விற்பனைக்காக ஏரிகளில் தண்ணீர் நிரப்பாமல் தண்ணீரை வீணடிக்கின்றனர். கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள ஏரிகளும், கரூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளும் நிரப்பப்படவில்லை. காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. கோதாவரியை கொண்டு வந்து காவிரியில் இணைப்பதாக சொல்லி, மடைமாற்றும் வேலையை அரசு செய்யக்கூடாது.

தமிழகத்தில் காவிரி, வைகை, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள் நிரம்பி ஓடுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்கள் வறண்டு கிடக்கின்றன. வைகை ஆற்றுக் கரையில் உள்ள கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு காவிரியும் விதிவிலக்கல்ல என்ற நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 ஏரிகள் வறண்டு கிடக்கின்றன.

image

நெல் விலையை உயர்த்தி இருப்பதாக அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு ஏமாற்று வேலை. நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ரூபாய் தருவோம் என தேர்தல் வாக்குறுதி அளித்தார்கள். அதுபோல கரும்பு டன் ஒன்றுக்கு 4500 ரூபாய் கொடுப்பதாக சொன்னார்கள். திமுக அரசு பதவியேற்று இரண்டாவது ஆண்டாக விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். இது ஒரு நயவஞ்சக நடவடிக்கை. நாளை 2500 ரூபாய் கொடுத்து அரசு நெல் கொள்முதல் செய்ய முன்வர வேண்டும்.

எட்டு வழி சாலை திட்டத்தில் தாங்கள் கமிஷன் பெற வேண்டும் என்பதற்காகத்தான் தேர்தலுக்கு முன்பு அதை ஏற்க மாட்டோம் என்று சொன்னதாகவும், தனக்கு கமிஷன் கிடைக்கும் என்ற நிலையில் அதை ஆதரிப்பதாகவும் விவசாயிகள் சந்தேகிக்கின்றனர். திமுக அரசு எட்டு வழி சாலை திட்டத்தை கைவிட முன்வர வேண்டும். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவின் கருத்து குறித்து வெளிப்படையாக முதல்வர் அறிவிக்க வேண்டும்.

சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக, நிலம் கொடுக்க எந்த விவசாயியும் முன்வரவில்லை. நிலம் கொடுக்கக்கூடிய விவசாயிக்கு சந்தை விலையை நிர்ணயம் செய்து கொடுக்க வேண்டும்.  நிலம் கொடுப்பவர்களின் குடும்பத்தினருக்கு வேலைக்கான உத்திரவாதம் வழங்க வேண்டும். வேலை கிடைக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம் என்று பேசக்கூடாது. வேலைக்கான உத்தரவாதத்தை கொடுக்க நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மறுத்துவருகிறார்.

image

நிலங்களைக் கொடுக்கும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பறிபோகிறது. விமான நிலையத்தின் மூலம் ஒரு தனியார் சம்பாதிக்கும் போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் விதத்தில் விமான நிலையத்தின் பங்குதாரர்களாக விவசாயிகளை இணைக்க வேண்டும். விமான நிலைய வருவாயில் ஆண்டுக்கு ஒரு முறை ஈவுத்தொகை வழங்கப்பட வேண்டும். கரூர் முதல் சிதம்பரம் வரை உள்ள காவிரி பாசன பகுதிகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் குழு அமைக்க வேண்டும். இப்பகுதிகளில் வறண்டு கிடக்கும் ஏரிகளை ஆய்வு செய்து தண்ணீரை நிரப்ப முன் வர வேண்டும்.

தமிழ்நாட்டில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது. குறிப்பாக பாசன ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். வடிகால் ஆறுகளில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும். அதற்கு மனிதர்களை பயன்படுத்தி மணல் எடுக்க வேண்டும். மாறாக ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மணல் அள்ளுவதை தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் வடிகால் ஆறுகளிலும் மணல் அள்ளக்கூடாது.

விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கருத்து கேட்டு, விவசாயத்திற்கும், பாசனத்திற்கும் பாதிப்பில்லாத வகையில் மணல் எடுக்க வேண்டும். மணல் அள்ளுவது அரசு என்று சொல்லப்படுகிறது. விற்பனை செய்வது தனியாருக்கு கொடுத்திருக்கிறார்கள். மணலின் விலை யூனிட் ஒன்று பத்தாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மணலுக்கான உரிய விலையை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். நீரோட்டத்தை பாதிக்கும் விதத்திலும், பாசனத்தை பாதிக்கும் வகையிலும் மணல் எடுக்கக் கூடாது” இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்