Published : 31,Aug 2022 04:00 PM

’கோப்ரா’ விமர்சனம்: மாஸான க்ரைம் த்ரில்லர்தான்; இன்னும் தெளிவாக, நறுக்கென சீறியிருக்கலாம்!

Vikram-s-Cobra-Movie-Review

பணத்துக்காக கொலை செய்யும் ஹிட்மேன் ஹீரோ, அவரைத் துரத்தும் போலீஸூம், வில்லனும் தான் ‘கோப்ரா’ ஒன்லைன்.

சென்னையில் மாணவர்களுக்கு கணிதப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் மதி (விக்ரம்). விக்ரம் மேல் காதல் கொண்டு, கல்யாணம் செய்ய சொல்லி அவரையே சுற்றி சுற்றி வருகிறார் பாவனா (ஸ்ரீநிதி ஷெட்டி). இதே விக்ரமுக்கு இன்னொரு முகமும் உண்டு. கணித ஆசிரியர் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு, கே.எஸ்.ரவிக்குமார் சொல்லும் மிகப்பெரிய ஆட்களை கொலை செய்யும் அசாசினாகவும் இருக்கிறார். அதன்மூலம் வரும் பணத்தில் பல்வேறு அனாதை ஆசிரமங்களுக்கு டொனேஷன் கொடுக்கிறார். அப்படி அவர் செய்யும் டாஸ்கில் ஸ்காட்லாந்தின் இளவரசனும் கொல்லப்படுகிறார். அந்தக் கொலையும், ஒரிசாவின் முதல்வர் கொல்லப்பட்ட விதமும் ஒரே பேர்ட்டனாக உள்ளது என தெரியவர இந்த கொலையாளியை தேடி புறப்படுகிறார் இண்டர்-போல் அதிகாரி இஸ்லன் (இர்ஃபான் பதான்).

இதில்லாமல் தொழிலதிபர் ரிஷி (ரோஷன் மேத்யூ), விக்ரமைப் பற்றி போலீஸூக்கு துப்பு கொடுக்கும் ஒரு ஹேக்கர் கதாபாத்திரங்களும், சிக்கல்களாக வருகிறார்கள். இர்ஃபான் கொலையாளியைக் கண்டுபிடிக்கிறாரா? ரோஷன் மேத்யூவுக்கும் விக்ரமுக்கும் என்ன பிரச்சனை? விக்ரமை சிக்க வைக்க நினைக்கும் அந்த ஹேக்கர் யார்? விக்ரமின் மர்மமான பின்கதை என்ன? இந்தப் பிரச்சனைகளில் இருந்து விக்ரம் தப்பினாரா? இல்லையா என்பதெல்லாம் தான் மீதிக்கதை.

image

படத்தை முடிந்த வரை பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் கொண்டு செல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. விக்ரம் செய்யும் க்ரைம் எல்லாம் கணிதம் சார்ந்து நிகழ்கிறது என்பதைக் கதையில் கொண்டு வந்த விதம், கே.எஸ்.ரவிக்குமார் - விக்ரம் இடையேயான தகவல் பரிமாற்றம் என சில விஷயங்களை நன்றாக வடிவமைத்திருக்கிறார். அது படத்தின் சுவாரஸ்யத்தை தக்க வைக்கிறது.

நடிப்பை பொறுத்தவரை விக்ரம் எப்போதும் போல அசால்ட்டாக எல்லா காட்சிகளிலும் அசத்துகிறார். ஸ்ரீநிதி ஷெட்டியை விட்டு விலகுவது, தனது கடந்த காலத்தை நினைத்து வருந்துவது என சில எமோஷனல் காட்சிகளை அருமையாகத் தாங்குகிறார். விக்ரம் விசாரிக்கப்படும் காட்சி, வில்லனை சந்திக்கும் முன் விடைபெறும் காட்சி என ரசிகர்களுக்கான சர்ப்ரைஸும் உண்டு. கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, போலீஸூக்கு உதவும் மீனாட்சி, முக்கியமான பகுதியில் வரும் மிருணாளினி எல்லோரும் படத்துக்கு தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

படத்தின் முதல் பிரச்சனை, படத்துடைய நீளம் தான். மூன்று மணிநேரம் எடுத்துக் கொண்டு சொல்லவேண்டிய கதையாக இந்தப் படம் இருக்கிறதா என்றால் இல்லை. ஹீரோ தனது கணித மேதமையை வைத்து குற்றங்கள் செய்கிறார் என்பதைச் சொல்லவும், அதை அதிகாரிகள் கண்டுபிடிப்பதுமே பாதி படத்திற்கு மேல் சொல்லப்படுகிறது. படத்தில் விக்ரம் பலவிதமான கெட்டப்களில் வரும் ஐடியா நன்றாக இருந்தாலும், ப்ராஸ்தடிக் மேக்கப்புகள் அப்பட்டமாக தெரிகிறது. அதே போல் படத்தின் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கும் கெட்டப்பும் மிக மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.

image

இந்த வழக்கை விசாரிக்க வரும் அதிகாரியாக வரும் இர்ஃபான் பதான், வெறும் பெயரளவுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கிறார். இந்த வழக்கின் பின்னால் இருக்கும் எல்லா உண்மைகளையும், மீனாட்சி கதாபாத்திரமே கண்டுபிடித்து சொல்லுவதால், இர்ஃபானுக்கான கதாபாத்திரம் முக்கியத்துவம் இல்லாமல் போகிறது.

இந்த படம் எமோஷனலான க்ரைம் த்ரில்லர் படமாக கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் க்ரைம் த்ரில்லர் ஒர்க் ஆன அளவுக்கு, படத்தின் எமோஷனோ, ஹீரோவுக்கு சைக்கலாஜிகலாக இருக்கும் சிக்கலோ ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஹீரோவின் அந்த ஹாலூஷினேஷன் கதைக்கு எந்த விதத்திலும் பயன்படவில்லை.

image

படத்தின் பிரம்மாண்டமான காட்சிகளை அழகாக பதிவு செய்திருக்கிறது ஹரீஷ் கண்ணனின் கேமரா. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் அதிரா, தும்பி துள்ளல் பாடல்கள் ஈர்க்கிறது. ஆனால் பின்னணி இசையால் படத்தை சுவாரஸ்யப்படுத்த தவறி இருக்கிறார்.

சொல்ல வந்த கதையை இன்னும் தெளிவாக, நறுக்கென சொல்லியிருந்தால், பிரமாதமான க்ரைம் த்ரில்லர் படமாக ஈர்த்திருக்கும். ஆனாலும் கூட படத்தின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் பார்க்கக் கூடிய ஆடியன்ஸுக்கு ஓரளவு திருப்தி தரும் படமாக இருக்கும் இந்த `கோப்ரா’.

- ஜான்சன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்