
பிரேக்கப். இந்த பிரேக்கப்பை எவரும் எப்போதுமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கமாட்டார்கள். சிறு பிணக்குக் கூட உறவு முறிவை ஏற்படுத்திவிடும். முந்தைய நாள் வரை ஒன்றாக உலவளாவிக் கொண்டிருந்தாலும் அத்தனை நாள் பொத்தி பொத்தி வைத்திருந்த அனைத்தும் அன்றைய நாள் கொட்டும்போது அது ஒரு கட்டத்தில் பிரேக்கப்பை ஏற்படுத்திவிடும்.
அந்த வலியைப் பற்றி எந்த சந்தர்ப்பங்களும் உங்களைத் தயார்படுத்தாத அல்லது எச்சரிக்காததால், முறிவுகள் கடினமாகவும் சில சமயங்களில் திகிலூட்டுவதாகவும் இருக்கும். சிலருக்கு மீண்டும் சுதந்திரம் கிடைத்ததைப் போல உணரச் செய்தாலும், சிலருக்கு உலகமே தலைகீழாக போனது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.
மேலும் இனி இந்த உலகில் தங்களுக்கு நல்லவைகள் எதுவுமே நடக்காது என்ற எண்ணங்களை தோன்ற வைக்கும். ஆனால் காதல் உறவின் பிரிவில் இருந்து மீள்வதற்கு காலம் எடுக்கும் என்பதே நிதர்சனம். அந்த சமயத்தில் உங்களை நீங்களே கருணையுடன் நடத்தவும், உங்களுடைய உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் ஏற்றுக்கொள்ளவும் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
இதுபோக காதல் உறவின் பிரிவிற்கு பிறகு என்ன மாதிரியான உடல், மன ரீதியான மாறுதல்கள் ஏற்படும், அவற்றில் இருந்து வெளியேற என்ன செய்யலாம் என்பது குறித்த சில வழிகளை காணலாம்:
1) உங்கள் காதல் உறவை நீங்களே முறித்துக் கொண்டிருந்தாலும் அது குறித்து வருத்தப்படவும், துக்கப்படவும் நீங்கள் அனுமதிக்கப்படுகிறீர்கள். இந்த வருத்தமும் துக்கமும் நல்ல நேரத்தை இழந்ததாக இருக்கலாம், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையும் கனவும், அந்த நபர் மீது கொண்டிருந்த பற்றின் காரணமாக இருக்கலாம். ஆகவே பிரேக்கப்பிற்கு பிறகு வருத்த நிலை ஏற்படுவதில் எந்த தவறும் இல்லை.
2) உறவு முறிவுக்கு பிறகு உணர்ச்சி ரீதியிலான வலி உடல் ரீதியாக வெளிப்படும். அதனால் தலைவலி, தூக்கமின்மை, பசியின்மை, அதிகமாக சாப்பிடுவது, சோர்வாக இருப்பது, வயிற்று வலி போன்றவை ஏற்படலாம்.
3) உங்களுடைய உணர்ச்சிகளை உங்களுக்குள்ளேயே அடக்கி வைத்துக் கொள்வதால் உங்களுக்கு எந்த பயனையும் கொடுத்துவிடாது. வலிமிகுந்த நினைவலைகளை அடக்குவதற்குப் பதிலாக, அந்த உறவில் நடந்த நல்ல சமயங்களையோ அல்லது பிரிந்த உறவில் இருந்து கற்றுக்கொண்ட பாடத்தைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கலாம். வலிகள் நிறைந்த அந்த நினைவலைகளை கடந்த காலத்திலேயே விட்டுவிடுவதுதான் நல்லது. அதனை உங்களை நிகழ்காலத்தோடு தொடர்ந்துக் கொண்டே இருந்தால் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
4) பிரேக்கப்பினால் மன ரீதியான பல வகைகளில் உங்களை பாதிக்கலாம். அதன்படி, மதிப்பற்றதாக உணரலாம், ஓய்வில்லாமல் இருக்கலாம், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம், முடிவெடுப்பதில் தடுமாற்றம் வரலாம், தூக்கம் இல்லாமல் தவிக்கலாம், பதற்றம், கவலையுற நேரலாம்.
ALSO READ:
இந்த மன ரீதியான பிரச்னைகளை கையாள முடியாவிட்டால் எந்த தயக்கமும் இல்லாமல் மன ஆரோக்கியத்திற்கான மருத்துவரை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
உற்ற நண்பர்களிடமோ, குடும்பத்தாரிடமோ உங்களுடைய உள்ளக்குமுறல்களை கொட்டத் தவறாதீர்கள். மனநலம் தொடர்பாக உதவி கேட்க எப்போதும் தயங்காதீர்கள். ஒரு உறவு முறிவுக்குப் பிறகு உங்களது உடல் மற்றும் உணர்வு ரீதியாக ஏற்படும் மாற்றங்கள் அனைத்துமே உண்மையானதுதான். அதில் எந்த பகட்டும் இருந்திடாது.
ஆனால் அதனை ஏற்றுக் கொண்டு உங்களுடைய எதிர்கால வாழ்க்கையை பாதிக்காதவாறு அதனை கையாள்வது உங்கள் கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு பிடித்தமான மன நிம்மதியை கொடுக்கக் கூடிய வேலைகளில் உங்களை மனநல ஆலோசகரின் உதவியுடன் ஈடுபடுத்தலாம்.