
உத்தர பிரதேசத்தில் உணவு கொண்டுவர தாமதப்படுத்திய 21 வயது மகளை கொலைசெய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் பகுதியைச் சேர்ந்தவர் மோஹித் ஃபரியாத்(55). இவருக்கு 6 குழந்தைகள் உள்ளனர். அதில் ஒரு மகள் ரேஷ்மா(21). ரேஷ்மாவிற்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடக்கவிருந்தது. இந்நிலையில் சாப்பிட உட்கார்ந்திருந்த தந்தைக்கு உணவை கொண்டுவந்து தர தாமதப்படுத்தியிருக்கிறார் ரேஷ்மா. இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதில் மிகவும் கடுமையான வார்த்தைகளால் கோபமாக பேசியிருக்கிறார் ரேஷ்மா. அது தந்தையை மேலும் கோபப்படுத்தவே அவர் ஆத்திரத்தில் புல் வெட்ட பயன்படுத்தும் கூர்மையான கத்தியை எடுத்து மகளை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமுற்ற ரேஷ்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தந்தையை கைது செய்தனர். இதுகுறித்து காவல் அதிகாரி முகேஷ் சந்திரா கூறுகையில், ‘’பாப்கார் காவல்நிலையத்தில் கொலைகுற்றத்திற்காக இந்திய சட்டப்பிரிவு 302இன் ஃபரியாத் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உடல் தற்போது பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி ரேஷ்மாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.