Published : 28,Aug 2022 07:32 AM

ஆசிய கோப்பை 'ஹை வோல்டேஜ்' போட்டி: இந்தியா - பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

Asia-Cup-2022-Rohit-Sharma-India-have-surprises-up-their-sleeves-in-battle-of-egos-vs-Pakistan

ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான லீக் ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய  6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் களம் காண்கிறது. இந்தியா தனது முதல் போட்டியில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான் அணியுடன் இன்று இரவு லீக் சுற்றில் மோதுகிறது.

கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிட்டத்தட்ட உலகக் கோப்பை போட்டிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அதிர்ச்சி அளித்திருந்தது. இதனால் இந்த ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது இந்திய அணி.

image

பரம எதிரிகளாக பார்க்கப்பட்டாலும் கிரிக்கெட் என்ற ஒற்றை புள்ளியில் இணைந்துள்ளனர் இருநாட்டு வீரர்கள். துபாய் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள வந்த இந்திய வீரர்கள் சாஹல், ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், விராட் கோலி உள்ளிட்டோர் காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஷஹீன் அப்ரிடியிடம் நலம் விசாரித்தார்கள். அதேபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாமும் விராட் கோலியும் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்த போது கைகளை குலுக்கி ‘ஹலோ' சொல்லிவிட்டு சில நொடிகள் பேசி உள்ளனர். கோலி விடைபெறும் முன்பு, நீங்கள் பழையபடி நன்றாக விளையாட வேண்டும் என நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்று கூறியுள்ளார் ஷாஹீன் அப்ரிடி. களத்திற்கு வெளியே இரு அணி வீரர்களுக்கும் இடையே இருக்கும் ஆத்மார்த்தமான நட்பும், அன்பும் உண்மையில் மெச்சத்தக்கது.

இந்திய அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் இந்த ஆசிய கோப்பையிலிருந்து விலகியுள்ளார். அதேபோல் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஷாஹீன் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.

இந்திய அணி பேட்டிங்கில் ரோகித் சா்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், சூரியகுமாா் யாதவ், ஹாா்திக் பாண்டியா ஆகியோரை பெரிதும் நம்பி உள்ளது. விராட் கோலி இன்று தனது 100-வது டி20 ஆட்டத்தில் களமிறங்க உள்ளார். ஒரு மாத ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் களம் திரும்பும் விராட் கோலி மீண்டும் ஃபார்முக்கு வருவாரா என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பாக்கா் ஜமான், ஆஸிப் அலி, குஷ்தில் ஷா, ஹைதா் அலி ஆகியோா் முதுகெலும்பாக உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் இதுவரை 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 6 வெற்றியும், பாகிஸ்தான் 2 வெற்றியும் பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. வரும் அக்டோபா் மாதம் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் ஆசியக் கோப்பை போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

image

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்:-

இந்தியா: கேஎல் ராகுல், ரோகித் சர்மா (கேப்டன்) விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

பாகிஸ்தான்: பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், ஆசிப் அலி, இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஷதாப் கான், உஸ்மான் காதிர், ஷாநவாஸ் தஹானி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா

இதையும் படிக்க: ”தீவிர மனஅழுத்தத்தில் இருந்தேன்; ஒரு மாதம் பேட்டையே தொடவில்லை”.. மனம் திறந்த விராட் கோலி!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்