Published : 27,Aug 2022 06:37 AM
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்களை திருடி வந்த வாலிபர் கைது.!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் இருசக்கர வாகனங்களை திருடிவந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து 13 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருடுபோவதாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இது தொடர்பாக மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பண்ருட்டியைச் சேர்ந்த மணப்பாக்கம் பகுதியில் வசிக்கும் கணேசன் என்ற வாலிபர் தான் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அதனடிப்படையில் கணேசனை கைது செய்த போலீசார் அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திய நிலையில், அவனால் திருடப்பட்டு எண்ணூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 13 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளனர்.
மேலும் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.