Published : 25,Aug 2022 03:16 PM
’நாள்பட்ட கொரோனா நோயாளியிடமிருந்து புதிய திரிபு பரவுகிறதா?’-அதிர்ச்சியான ஆய்வு முடிவுகள்!

கொரோனா தொற்று ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு பரவியது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் நாள்பட்ட மற்றும் நீண்ட நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் திரிபுகள் பரவக்கூடும் எனவும், அவை மிகவும் ஆபத்தானவை என்பதால், கவனம் செலுத்துவது அவசியம் எனவும் எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளுக்கு மருந்து எடுத்துக்கொள்பவர்களின் உடலில் ஒரு வருடம் அல்லது அதற்கும் மேலாக கொரோனா நோய்த்தொற்று செயலில் இருப்பதாக ஆரம்பகட்ட ஆய்வுகள் தெரிவித்தன. இவர்களை அடையாளம் காண்பது அரிது. இவர்களை கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சைபெற வைப்பது மட்டுமல்லாமல், இவர்கள் உடலில் இருக்கும் SARS-CoV-2 வைரஸ்களின் மரபணுக்களை கண்காணிப்பதும் அவசியமாகிறது.
நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்து கடுமையான கொரோனா நோய்த்தொற்று சங்கிலியாக பரவினாலும், திரிபு என்பது மிகவும் அரிதானதாகவே இருக்கிறது. அதிலும் யாருடைய உடலில் வைரஸானது மாதக்கணக்கில் செயலில் இருக்கிறதோ அவர்களிடமிருந்தே திரிபுகள் உருவாகின்றன என்பதை எங்களுடைய ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன’’ என்கிறார் அமெரிக்காவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தில் உயிரியல் மற்றும் இயற்பியல் பேராசிரியர் டேனியல் வெய்ஸ்மேன்.
SARS-CoV-2 போன்ற வைரஸ்களின் மரபணு குறியீட்டில் அவ்வப்போது ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக அவை தொடர்ந்து உருமாறி உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒரு வைரஸ் தன்னை தானே நகலெடுத்தாலும் அது அப்படியே கச்சிதமானதாக இருக்காது என்கிறார் வெய்ஸ்மேன்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும், ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமானவர்களையும் கூட SARS-CoV-2 வைரஸின் திரிபுகள் தாக்கக்கூடும் என எச்சரிக்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புதிய ஆய்வறிக்கையின் முதல் ஆசிரியரும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளரும் மகான் கஃபாரி கூறுகையில், நாள்பட்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்கள் குணமடைய தேவையான வசதிகளை உருவாக்கி தருவது மிகவும் முக்கியம் என்கிறார். மேலும், நிறைய பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வைரஸை பரப்பிவந்தாலும் அவர்களுக்கு தொற்று இருப்பதற்கான எந்த அறிகுறிகளும் தென்படாது. இவர்களை கண்டறிவது மேலும் கடினம் என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொரோனா வைரஸ்களை ஆல்பா, பீடா மற்றும் காமா என வகைப்படுத்தி அழைத்தது உலக சுகாதார நிறுவனம். இந்த வைரஸிலுள்ள சிக்கலைப் படிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு இயந்திர மற்றும் தத்துவார்த்த மாதிரியை உருவாக்கியுள்ளனர்.
அந்த மாதிரியானது, கொரோனா வைரஸின் தொடர்ச்சியான பரவுதலால் திரிபுகள் ஏற்பட்டது என்ற கோட்பாட்டை நிராகரிக்கிறது. அதேசமயம், உருவாகியுள்ள ஒவ்வொரு திரிபும் ஒரு தனிநபருக்குள் இருந்த நாள்பட்ட தொற்றின் விளைவாக உருவானது என்ற கோட்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறது.
2020ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் உருவான டெல்டா வகையானது வெகு வேகமாக உலக நாடுகளுக்கு பரவியது. பின்னர் 2021ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்ரிக்காவிலிருந்து பரவிய ஒமைக்ரான் வகையால் டெல்டாவின் தாக்கம் தணிந்தது. இந்த ஒமைக்ரான் டெல்டாவிலிருந்து தோன்றியது அல்ல. இதுவும் வேகமாக பரவி உலக நாடுகளை ஆதிக்கம் செய்தது. ஒரு திரிபுக்கும் அதன்பிறகு புதிய திரிபு உருவாவதற்கும் இடைப்பட்ட கால அளவை எதிர்காலத்தில் நாங்கள் கணக்கிட விரும்புகிறோம். இது பொது சுகாதாரத்தை அணுகும் பார்வையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்கிறார் வெய்ஸ்மேன்.
மேலும் நாள்பட்ட கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து அடுத்து என்ன திரிபு உருவாகி உலகையே உலையில் வைக்கப்போகிறதோ யாருக்கு தெரியும்? என்கிறார் கஃபாரி.