செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் 'பாசிடிவ் ரிசல்ட்' வரணுமா? இந்த தவறெல்லாம் செய்யாதீங்க!

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் 'பாசிடிவ் ரிசல்ட்' வரணுமா? இந்த தவறெல்லாம் செய்யாதீங்க!
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையில் 'பாசிடிவ் ரிசல்ட்' வரணுமா? இந்த தவறெல்லாம் செய்யாதீங்க!

செயற்கை கருத்தரிப்பு முறையில் குழந்தை பெறுவோர் எண்ணிக்கை இந்தியாவில் உயர்ந்தபடியே இருக்கிறது. செயற்கை கருத்தரிப்பில் பல வழிமுறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானதாக இருக்கிறது இன்-விட்ரோ முறையில் கருத்தரித்தல் (IVF). பெண்ணின் கருமுட்டையினை ஆணின் விந்தணுவின் செயற்கையாக ஆய்வகத்தில் ஒன்றிணைத்து, அதன்மூலம் குழந்தை பெறுவதுதான் இன்-விட்ரோ கருத்தரித்தல் முறை. கருத்தரித்தலுக்கு மிக முக்கியமாக உதவும் இந்த முறை எண்ணற்றோருக்கு குழந்தைப்பேற்றை கொடுத்துள்ளது.

இருப்பினும் எல்லா இன்-விட்ரோ முறை கருத்தரிப்பும் வெற்றியடைவதில்லை. சில நேரங்களில் அது தோல்வியடையவும் கூடும். சம்பந்தப்பட்ட இணையர்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்தே இன்-விட்ரோ முறையின் வெற்றியும் தோல்வியும் அமையும். இது செயற்கை கருத்தரிப்புக்கு செல்லும் எல்லா இணையர்களுக்கும் பொருந்தும். அந்த வகையில், செயற்கை கருத்தரிப்பில் இணைய முற்படுவோர், உடல் ஆரோக்கியத்தில் மிக மிக கவனத்தோடு இருக்க வேண்டும். இப்படியானவர்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் - செய்யக்கூடாது என்பது பற்றிய முக்கியமான ஒரு சில பொது மருத்துவ அறிவுரைகளை இங்கே தொகுத்துள்ளோம்.

கருத்தரிப்புக்கான சிகிச்சைகளை தொடங்கும் முன் இருந்தே, இணையர்கள் கீழ்க்காணும் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.

* சிகிச்சை தொடக்கத்திலிருந்தே மது அருந்துவது, புகைப்பிடிப்பதை தவிர்க்கவும். இதன்மூலம் சிகிச்சை வெற்றியடையும் வாய்ப்பு அதிகரிக்கும்.

* காஃபி அல்லது கஃபைன் கலந்த பிற பொருட்களை அதிகம் எடுத்துக்கொள்வோருக்கு செயற்கை கருத்தரிப்பில் பாசிடிவ் ரிசல்ட் தெரிவதில் வாய்ப்பு குறைவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகவே கஃபைன் அதிகமாக உட்கொள்ள வேண்டாம்.

* ஆரோக்கியமான சரிவிகித உணவுப்பழக்கத்தை (Balanced Diet) மட்டும் பின்பற்றுங்கள். இதில்தான் வைட்டமின்கள், அமிலங்கள், ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் ஆகியவை சரியான அளவில் இருக்குமென்பதால், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை உடல் ஏற்றுக்கொள்ளும் வாய்ப்பு உயரும்

* இணையர்கள் இருவருமே, மருத்துவரின் அறிவுரைகளை முழுமையாக பின்பற்றுங்கள். எந்தச்சூழலிலும் அவற்றிலிருந்து பாதியில் சுயமாக முடிவெடுத்து நின்றுவிட வேண்டாம். அப்படி முடிவெடுத்து நிறுத்துவது, பிரச்னையை அதிகரிக்கும்.

கரு உருவாகமல் இருக்க மிகமுக்கியமான காரணங்கள் :

* விந்தணு அல்லது கருமுட்டையின் எண்ணிக்கையோ தரமோ குறைவாக இருப்பது

* சம்பந்தப்பட்ட பெண்ணின் கருக்குழாயில் (Fallopian Tube) அடைப்பு இருப்பது.

* கருக்குழாயில் ஏற்கெனவே ஏதேனும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டு அப்பகுதி பாதிக்கப்படும்

* கருமுட்டை அல்லது விந்தணு, ஒன்றோடு ஒன்று இணைவதில் சிக்கல் இருப்பது

இதுமாதிரியான சிக்கல்களுக்கு உணவுப்பழக்க வழக்கத்தை சரியாக பின்பற்றாததும் ஒரு காரணமாக இருக்கும் என்பதால், உணவுப்பழக்க வழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.

தம்பதியினர், முதல் நிலையிலேயே மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகள் :

* தைராய்டு, புராக்டோலின் (Proctolin) போன்ற ஹார்மோனுக்கான பரிசோதனைகள்

* சர்க்கரைநோய் பரிசோதனை

* சம்பந்தப்பட்ட பெண்ணின், கருக்குழாயில் அடைப்பு ஏதேனும் உள்ளதா என்ற பரிசோதனை. ஹெச்.எஸ்.சி என்ற எக்ஸ்ரே மூலமாகவோ லேப்ரோஸ்கோபி மூலமாகவோ இதை அறிந்து கொள்ளலாம்

* கருமுட்டை மற்றும் விந்தணுவின் தன்மை, அளவு எப்படி இருக்கிறது என்ற பரிசோதனை

இவை அனைத்தையும் ஆண், பெண் என இரு பாலினருமே, எந்த சமரசமுமின்றி செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பு: இவையாவும் மருத்துவர்களின் நேரடி பரிந்துரை அல்ல. பொதுவான அறிவுரைகள் மட்டுமே. ஆகவே இணையர்கள் தாங்கள் சிகிச்சை பெறும் மருத்துவர்களிடம் நேரடியாக ஆலோசனை பெற்றுக்கொள்ளவும். செயற்கை கருத்தரிப்பின் மூன்றாம் நிலையில்தான் ஐ.வி.எஃப் வழிமுறை பின்பற்றப்படும். அதற்கு முன் Natural Cycle IVF, Intrauterine insemination - IUI ஆகியவை பின்பற்றப்படும். அனைத்து நிலையிலுமே மருத்துவ வழிமுறையே முதன்மை.

தகவல் உதவி: TimesNow

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com