Published : 21,Aug 2022 09:48 AM

சிறுத்தை போன்ற பாய்ச்சல்... தடகளத்தின் நாயகன் உசேன் போல்ட் - சில சுவாரஸ்ய தகவல்கள்!

How-Usain-Bolt-became-a-lightning-fast-athlete-

ஓடுகளத்தில் சிறுத்தையைப்போல விரைந்து ஓடுவார். துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட குண்டு போலப் பாய்ந்து செல்வார். வரலாற்றில் கணக்கெடுக்கப்பட்ட வரையில் எந்த மனிதரும் இவரைப் போன்ற வேகத்தில் ஓடியதில்லை.

ஒரு மனிதன் இவ்வளவு வேகத்தில் ஓட முடியுமா என்று நிபுணர்களே வியந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு நம்ப முடியாத வேகம். பரிணாம வளர்ச்சியின் புதிய அவதாரம் உசேன் போல்ட். இன்றைய அகராதியில் வேகத்துக்கான மறுசொல்.

கரீபியன் தேசமான ஜமைக்காவை உலகறியச் செய்தவர்களுள் ஒருவர் உசேன் போல்ட். அவரது இன்றைய பெருமைகளின் தொடக்கம் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் தொடங்கியது. நூறு மீட்டர், இருநூறு மீட்டர் என இரு போட்டிகளிலும் வெற்றிபெறப் போவதாக உசேன் போல்ட் அறிவித்திருந்தது, பலரது புருவங்களையும் உயரச் செய்தது. அனுபவம் இல்லாத வீரரால் இத்தகைய சாதனைகளை நிகழ்த்த முடியாது என்று விமர்சனங்கள் வந்தன. சிலர் தலைக்கனம் என்றுகூட சொன்னார்கள்.

image

ஆனால் 200 மீட்டரிலும் 400 மீட்டரிலும் உலக சாதனையைத் தக்க வைத்திருந்த மிக்கேல் ஜான்சன், உசேன் போல்டுக்கு ஆதரவாகப் பேசினார். உசேன் போல்டின் சொற்களை அவர் தன்னம்பிக்கையாகப் பார்த்தார். ஜான்சனின் எண்ணம் பொய்த்துப் போகவில்லை. நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் தொடக்கச் சுற்றுகளில் எதிர்பார்த்த வேகத்திலேயே உசேன் போல்ட் ஓடினார். நூறு மீட்டர் ஓட்டத்தின் காலிறுதிப் போட்டியில் அவரது நேரம் 9.92 நொடிகள். அரையிறுதியில் 9.85 நொடிகள்.

பெய்ஜிங் ஒலிம்பிக்கின் 100 மீட்டர் ஓட்டத்தில் இறுதிப் போட்டி. வெறும் பத்தே நொடிகளில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டு விடும். சொந்த நாட்டைச் சேர்ந்த அசஃபா பாவல் மிக அருகிலேயே ஓடுவதற்குத் தயாராக இருந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் வீரர்கள் வேகமெடுக்கிறார்கள். சில நொடிகளில் அரிய சாதனை நிகழ்த்தப்படுகிறது. நூறு மீட்டர் தொலைவை உசேன் போல்ட் 9.69 நொடிகளில் கடந்து, புதிய உலக சாதனையைப் படைத்தார். எல்லைக்கோட்டைத் தொடும்போது, தனக்கு அடுத்தாக வந்த டிரினாட் அண்ட் டொபாகோவைச் சேர்ந்த ரிச்சர்ட் தாம்சனைவிட பல மீட்டர்கள் முந்தியிருந்தார் போல்ட்.

அப்போது யார் இந்த பையன் என்று வியந்து பார்க்கப்பட்ட உசேல்ட் போல்ட் அதன் பிறகு விளையாட்டு உலகமே கொண்டாடும் வரலாறானாது வேறு கதை.

உசேன் போல்ட்

image

வரலாற்றை மாற்றி எழுதி உலகின் அதிவேக‌ மனிதர் என்று அழைக்‌கப்படும் உசேன் போல்ட் 1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ல் ஜமைக்காவில் பிறந்தார். கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டிகளில் ஆர்வம் கொண்ட உசேன் போல்ட் தனது 15ஆவது வயதில் தான் முதன்முதலில் தடகள போட்டிகளில் விளையாட ஆரம்பித்தார். பின்னர் முதன்முதலில் 2001 கரிஃப்டா விளையாட்டுகளில் பங்கேற்ற அவர் 400 மீட்டர் ஓட்டத்தில் 48.28 நொடியிலும், 200 மீட்டர் பந்தயத்தில் 21.81 நொடியிலும் ஓடி வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே ஆண்டு ஹங்கேரியில் நடைபெற்ற உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை என்றாலும் 21.73 நொடி என்ற அதிவேகத்தை கடந்து எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் அவருடைய சொந்த மண்ணில் கிங்ஸ்டனில் நடைபெற்ற 2002 ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் தடகளப் போட்டியில் 200 மீட்டர் ஓட்டத்தை அவருடைய முந்தய வேகத்தை விட இன்னும் வேகமாக ஓடி 20.61 நொடியில் கடந்து வெற்றி பெற்றார். இளையோருக்கான தடகள போட்டியில் தங்கம் வென்ற இளம் வீரர்களுள், போல்ட் நிகழ்த்தியது தான் மிக இள வயது வீரர் பெற்ற வெற்றியாக பதிவு செய்யப்பட்டது. அதற்கு பின்னர் தான் உலகம் வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றை படைத்து மின்னல் வேக வீரர் என்னும் பட்டத்தை தன்வசத்தில் வைத்துகொண்டுள்ளார் உசேன் போல்ட்.

உசேன் போல்ட் சாதனைகள்

உலகின் வேகமான மனிதர்' - உசைன் போல்ட்டின் சாதனை பயணம் - BBC News தமிழ்

ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் வெல்வதே பலருக்கும் எட்டாக்கனியாக இருக்க, இவரோ எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து மூன்று ஓலிம்பிக் போட்டிகளில் தங்கத்தை தட்டி சென்ற ஒரே வீரர் இவர்தான். 

2012 மற்றும் 2016 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர்‌ ஓட்டப்பந்தயத்திலும் முதலி‌டம் பிடித்து தனது நாட்டிற்கு பெருமை சேர்த்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற “கோல்டன் காலா” மற்றும் “உலக சாம்பியன்ஷிபப்” போட்டிகளில் 100  மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4×100 தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்று உலக தடகளப் போட்டிகளில் உச்சங்களை தொட்டார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் பந்தயங்களின் 30 ஆண்டு வரலாற்றின் அதிக வெற்றிகளைக் பெற்ற தலைச் சிறந்த வீரர்களுள் ஒருவர் என்ற பெருமையை பெற்றார் போல்ட்.

2009ல் பெர்லினில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்தார் உசைன் போல்ட். 13 ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும் இன்று வரை இச்சாதனை எவராலும் முறியடிக்கப்படவில்லை. 11 முறை உலக சாம்பியன் பட்டம் பெற்ற போல்ட்டை அதிவேக ஓட்டத்தின் அகராதி என்றால் எவரும் மறுக்க மாட்டார்கள்.

சிறப்புகள்

IAAF, ஒவ்வொரு வருடமும் வழங்கும் “சிறந்த உலக விளையாட்டு வீரர்” என்ற பட்டத்தை 2008, 2009, 2011, 2012 மற்றும் 2013 என தொடர்ந்து நான்கு ஆண்டுகளில் பெற்றுள்ளார்.

ஓய்வு

உசைன் போல்ட் வாழ்க்கை வரலாறு: ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த வெற்றி  வீரனின் கதை!

2017 ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்குப் பிறகு ஓட்டத்திலிருந்து ஒய்வு பெற்ற போல்ட், சிறிது காலம் கால்பந்து விளையாட்டின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார்.‌ ஓட்டப்பந்தயத்தில் புதிய வரலாற்றை படைத்த இந்த‌ப் புயல், கரை கடந்தாலும், அதன் சுவடுகள் காலத்திற்கும் அழியாமல் இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

- வேங்கையன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்