Published : 18,Sep 2017 04:55 AM

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் - தேர்தல் ஆணையம் தகவல்

Problem-in-Announcing-the-Local-Election-Date---Election-Commission-Information

உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதனால், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் கடந்த 2016 செப்டம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரிக்கப்பட்டு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மே மாதம் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது. வாக்காளர் பட்டியல் தயாராகவில்லை என்று கூறி, மாநிலத் தேர்தல் ஆணையம் சார்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கு கடந்த 4-ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ம் தேதிக்கு முன்னதாக நடத்த வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

உயர் நீதிமன்றம் அளித்த கெடு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில்,  தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், வார்டு பிரிவினை தொடர்பாக விளக்கம் தேவை என்று  தேர்தல் ஆணையம் இன்று நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. அதில், “1996-ம் ஆண்டு பிரிக்கப்பட்ட வார்டு பிரிவுகளின்படி தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? அல்லது தற்போது வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ள நிலவரப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமா? என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் தெளிவு வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்