தொடரும் அச்சுறுத்தல்: சல்மான் ருஷ்டியை தொடர்ந்து மேலும் ஒரு எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்

தொடரும் அச்சுறுத்தல்: சல்மான் ருஷ்டியை தொடர்ந்து மேலும் ஒரு எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்
தொடரும் அச்சுறுத்தல்: சல்மான் ருஷ்டியை தொடர்ந்து மேலும் ஒரு எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்

நியூயார்க்கில் கத்திக்குத்துக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மற்றொரு பிரபல எழுத்தாளரான ஜே.கே. ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1988-ம் ஆண்டில் வெளியான “தி சாட்டானிக் வெர்சஸ்” (THE SATANIC VERSUS) என்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளரான சல்மான் ருஷ்டிக்கு பல்வேறு தரப்பில் இருந்து அச்சுறுத்தல்கள் இருந்து வந்தன. இந்த நாவலில் இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபி குறித்தும், இஸ்லாம் நம்பிக்கைகள் குறித்தும் அவதூறுக் கருத்துகள் எழுதப்பட்டிருப்பதாக கூறி, கடந்த 1989-ம் ஆண்டு ஈரானின் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி, சல்மால் ருஷ்டியைக் கொல்ல உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

பல கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் குண்டுவெடிப்புகள் இந்நாவலுக்கு எதிர்வினையாக அமைந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியூயார்க் மாகாணத்தில் நிகழ்வு ஒன்றில் பங்கேற்றபோது சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டார்.

24 வயதுடைய இளைஞர் ஹடி மாதர் மூர்க்கத்தனமாக தாக்கியதில் பலத்த காயமடைந்த சல்மான் ருஷ்டி ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சல்மான் ருஷ்டிக்கு வழங்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தற்போது பேசுவதாகவும் மருத்துவமனை தலைவர் மைக்கேல் ஹில் தெரிவித்துள்ளார்.

சல்மான் ருஷ்டி மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் பிரபல எழுத்தாலர் ஜே.கே.ரவுலிங்கிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. ஹாரி பாட்டர் கதையை எழுதி பிரபலமான ஜே.கே.ரவுலிங், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார்.

மீர் ஆசிப் அஜீஸ் என்ற பெயரில் ட்விட்டர் கணக்கு கொண்ட நபர் ஒருவர், 'கவலைப்பட வேண்டாம் அடுத்து நீங்கள் தான்' என கொலை மிரட்டல் விடுத்து ட்வீட் செய்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சல்மான் ருஷ்டி தாக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் பைடன், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com