Published : 13,Aug 2022 08:35 PM

எளியோரின் வலிமைக் கதைகள் 39: ’’நைட்லகூட ஷிப்ட் வேலை... குடும்பத்துக்காக ஓடுறோம்’’

Life-of-common-man-who-works-in-online-food-delivery-jobs

முன்பெல்லாம் எந்த பொருள் வேண்டுமானாலும் நாமே சென்று வாங்கவேண்டிய நிலைமை இருந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் எந்த பொருள் வேண்டுமோ அந்த பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தால் போதும்; வீடு தேடி வந்துவிடும். அதிலும் குறிப்பாக உணவுப் பொருட்களைத்தான் நாம் வீடு தேடி கொண்டுவந்து கொடுக்கவேண்டும் என விரும்புகிறோம். இப்போது இருக்கிற அவசர, துரித வேலைகளில் அதற்கான நேரம் ஒதுக்குவதற்கு நாம் தயாராக இல்லை. ஆனால் அதற்கு பணம் செலவு செய்வதற்கு  தயாராக இருக்கிறோம். இப்படித்தான் சென்னை மட்டுமல்ல; தமிழகம் முழுவதுமுள்ள நகரங்களில் ஆர்டர் செய்தால் போதும்; அடுத்த நொடியில் உங்களைத் தேடி அந்த பொருட்கள் வந்துவிடும். குறிப்பாக உணவுப் பொருட்கள் வந்துவிடும்.

இப்படி நம்மை தேடி வந்து கொடுக்கிற நபர்களை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்களின் வாழ்க்கை நிலையையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஸ்விகி, சொமோட்டோ போன்ற நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பல கிளைகளை திறந்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து வருகிறது. அப்படி ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் சரவணன் என்பவரைத்தான் நாம் சந்தித்தோம்.

‘’என் பேரு சரவணன். எனக்கு வயசு 30 ஆகுது. திருமணம் ஆகிவிட்டது. நான் சென்னையில் உணவு கொண்டு போய் கொடுக்கிற ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். ஐந்து வருடத்திற்குமேல் அந்த நிறுவனத்தில் வேலை செய்கிறேன். இந்த நிறுவனத்தில் என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் வேலை செய்றாங்க. எல்லோருக்கும் ஷிப்ட் முறைதான். காலையில் 6 மணிக்கு துவங்கினா மாலை 6 மணி வரை கூட வேலை செய்வோம். பெரும்பாலும் உணவுகள்தான் ஆர்டர் பண்ணுவாங்க. காலை, மதியம், மாலை, இரவு அந்தந்த நேரத்துக்கு தேவையான உணவுகளை ஆர்டர் பண்ணுவாங்க. ஆன்லைன் மூலமாக ஆர்டர் பண்ணுகிற உணவுகளை அவர்கள் இருக்கிற இடம் தேடி கொண்டுபோய் கொடுக்குறதுதாங்க எங்களுக்கு வேலை. எங்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.5 கொடுப்பாங்க. அதிகபட்சம் 20 கிலோமீட்டர் வரைக்கும் கூட கொண்டு போய் உணவுகளை கொடுப்போம்.

இப்ப உணவு மட்டும் இல்லைங்க; வேற ஏதாவது பொருட்கள் கொடுக்க அந்த நிறுவனங்களில் தகவல் தெரிவிச்சிட்டா போதும். அதையும் கூட கொண்டுபோய் சம்பந்தப்பட்டவங்க கிட்ட சேர்த்து விடுவோம். ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரைக்கும் நாம சம்பாதித்தால் நிறுவனத்தில் இருந்து ஒரு 200 ரூபாய் நமக்கு கொடுப்பாங்க. அதிகபட்சம் ஒரு நாளைக்கு 700 ரூபாய் வரைக்கும் தாங்க சம்பாதிக்க முடியும். அதுலயும் 200 ரூபாய் பெட்ரோல் செலவுக்கு ஆயிடும். ஆர்டர் கொண்டு போய் கொடுக்கிற நேரம் கொஞ்சம் தாமதமாயிட்டா கூட வாடிக்கையாளர்கள் திட்டுவாங்க. இப்ப இருக்கிற சென்னை போக்குவரத்து நெரிசல்ல எவ்வளவு சீக்கிரம் போக நினைச்சாலும் போக முடியாத சூழ்நிலை தாங்க. அதுக்காக எங்களை போன்றவர்கள் அவங்க மேல வருத்தப்படுவது கிடையாது.

அவங்களுடைய தேவை குறிப்பிட்ட நேரத்துல பூர்த்தி ஆகணும்னு அவங்க நினைக்கிறாங்க. சாலையில் இருக்கிற சூழ்நிலை அவர்களுக்கு தெரியாது இல்லையா? இரவு நேரங்களில் கூட ஷிப்ட் முறை இருக்கும். சில நாட்களில் வேலையே இருக்காது. எப்படா கூப்பிடுவாங்க அப்படின்னு செல்போனையே பாத்துட்டு இருக்க வேண்டியது இருக்கும். இந்த வேலையில ஓரளவுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் போதும். டிரைவிங் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். வண்டிக்கு ஆர்சி புக் இருக்கணும். பத்தாவது படிச்சவங்களிலிருந்து பட்டம் படிச்சவங்க வரைக்கும் இங்க வேலை செய்றாங்க. சில வீடுகளுக்கு கொண்டுபோய் பொருள் கொடுக்கும்போது ரொம்ப அன்பா பேசுவாங்க. அது மாதிரி பேசுற ஒரு சிலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை போன்றவர்கள் பேசுவதை மனசுல நினைச்சுக்கிட்டு திட்றவங்கள மறந்துடுவோம்.

என்னென்னமோ உணவு பொருட்களை ஆர்டர் பண்ணுவாங்க. எல்லாத்தையும் கொண்டு போய் கொடுப்போம். ஆனால் அதுல ஒன்னுகூட நாங்க வாங்கி சாப்பிடணும்னு நினைக்கிறது இல்ல. காரணம் எங்களுடைய பொருளாதார நிலை அப்படி. தினமும் கிடைக்கிற இந்த 500 ரூபாய் வச்சிக்கிட்டுத் தான் வாடகை வீடு எடுத்து தங்கி இருக்கேன். திருமணம் ஆகி எனக்கு ஒரு குழந்தை இருக்கு. இன்னும் அந்த குழந்தையை பள்ளிக்கூடத்துல சேர்க்கலை. ஆனாலும் எதிர்காலம் இப்படியே இருந்தா குடும்பம் நடக்கிறது ரொம்ப சிரமம் தாங்க. கை, கால் உடம்பெல்லாம் நல்லா இருக்க வரைக்கும் தான் இந்த வேலை கூட செய்ய முடியும். அதுவும் இளம் வயசு அப்படிங்கிறதால சுறுசுறுப்பா ஓட முடியுது 40 வயசுக்கு மேல ஆயிட்டா இந்த வேலை கூட செய்ய முடியாது.

image

அதுக்குள்ள வேற வேலை தேடிக்கிட்டு போயிட வேண்டியது தான். ஏன்னா இந்த வேலையில் ஒரு திருப்தி அப்படின்னா எதிர்பார்க்கிறவங்களுக்கு அவங்க தேவைகளை பணம் கொடுத்தாகூட நிறைவேற்றுறமே அப்படிங்கிற ஒரு திருப்தி தாங்க. அதையே நினைச்சுக்கிட்டு தினமும் வண்டி ஓட்டிட்டு இருக்கேன் என்றார். தேவைகளை பூர்த்தி செய்வது என்பது ஒரு மிகப்பெரிய வேலை. என்னதான் பெரிய அளவு காசு பணம் இருந்தாலும் கூட அதைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கிறது அப்படிங்கறது ஒரு பெரிய சேவை மாதிரி தாங்க. இப்படித்தான் பல இளைஞர்கள் இதுபோன்ற சேவைகளை செய்துவராங்க’’.

ஒருநாளில் இதுபோன்ற நூற்றுக்கணக்கான சரவணன்களை நாம் சந்திக்கிறோம். ஆனால் எத்தனை பேரால் புரிந்துகொள்ள முடிகிறது அவர்களுடைய கஷ்டங்களை..? இனிமேல் ஆன்லைனில் ஆர்டர் செய்வோர் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ளா விட்டாலும் அவர்களை கடினமாக நடத்தாமல் இருப்பதே அவர்களுக்கு செய்யும் சிறிய உதவி. மேலும் ஒரு எளியோருடன் சந்திக்கலாம்.

முந்தைய அத்தியாயத்தை படிக்க... எளியோரின் வலிமை கதைகள் 38: ’சில நாட்களில் ரூ.500கூட கிடைக்காது’.. பைக் டிரைவரின் வாழ்க்கை! 

- ஜோதி நரசிம்மன்

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்