Published : 12,Aug 2022 10:14 PM

‘லெஜண்ட்’ பட நடிகை ஊர்வசி ரவுட்டேலா, ரிஷப் பந்த் இடையே திடீர் மோதல் - என்ன காரணம்?

Cricketer-Rishabh-Pant-s-fans-attack-Urvashi-Rautela-over-CONTROVERSIAL-claims

பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரிஷப் பந்த்திற்கும் இடையே சமூகவலைத்தளப் பக்கத்தில் திடீர் மோதல் எழுந்துள்ளது.

மாடலும், பாலிவுட் நடிகையுமான ஊர்வசி ரவுட்டேலா, சமீபத்தில் தமிழில் வெளியான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு தனது திரையுலகப் பயணம் மற்றும் சுவராஸ்யமான சில விஷயங்களைப் பற்றி நினைவு கூர்ந்திருந்தார். அதில், ’’திரு ஆர்.பி. என்னைச் சந்திக்க விரும்பி என்னுடைய ஓட்டல் லாபிக்கு வந்து நீண்ட நேரம் காத்திருந்தார். ஆனால் நான் வாரணாசியில் நாள் முழுவதும் படப்பிடிப்பில் கலந்துகொண்டு, பின்னர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதால், மிகவும் சோர்ந்துபோய் அவரைச் சந்திக்க வருவதாக தெரிவித்ததை மறந்து அறையில் தூங்கிவிட்டேன்.

பின்னர் கண்விழித்து பார்த்தப்போது, அவரிடமிருந்து 16 முதல் 17 முறை செல்ஃபோன் அழைப்புகள் வந்ததைக் கண்டு வருந்தினேன். ஒருவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்துவிட்டு அவரைச் சந்திக்க முடியாமல் போனதை நினைத்து மோசமாக உணர்ந்தேன். அதன்பிறகு அவரைத் தொடர்புகொண்டு நீங்கள் மும்பை வந்ததும் சந்திப்போம் என்று கூறினேன். அதன்படி நாங்கள் மும்பையில் சந்தித்தோம். ஆனால் அதற்குள் இந்த விஷயங்கள் எல்லாம் ஊடகங்களின் வெளிச்சத்திற்கு தெரியவந்துவிட்டன” என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து, ஆர்.பி. என்றால் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தா என்றும், அவர் தான் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவுக்காக நீண்ட நேரம் காத்திருந்தாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வைரலாக்கினர்.

இந்த வைரல் பதிவுகளை தொடர்ந்து இதற்குப் பதிலளிக்கும் விதமாக கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “பிரபலத்திற்காகவும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிப்பதற்காகவும் நேர்காணல்களில் மக்கள் எப்படி எல்லாம் பொய் சொல்கிறார்கள் என்பதை பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது. சிலர் புகழுக்காகவும், பெயருக்காகவும் ஏங்குவது வருத்தமாக இருக்கிறது. கடவுள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ’’என்னை தனியாக விடுங்கள் சகோதரி, பொய் சொல்வதற்கும் அளவு உண்டு’’ ஆகிய ஹேஷ்டேக்குகளை அந்தப் பதிவுடன் சேர்த்திருந்தார். நடிகை ஊர்வசி ரவுட்டேலாவின் பெயரைக் குறிப்பிடாமல் இந்தப் பதிவு வெளியிட்டு இருந்த நிலையில், சில நிமிடங்கள் கழித்து அந்தப் பதிவையும் ரிஷப் பந்த் நீக்கியிருந்தார்.

image

ஆனால் அதற்குள் நெட்டிசன்கள் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்களை எடுத்துப் பகிர்ந்து ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனைத் தொடர்ந்து நடிகை ஊர்வசி ரவுட்டேலா தனது சமூவலைத்தளப் பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார். அதில், “இளம் சகோதரரே கிரிக்கெட்டை மட்டும் விளையாடுங்கள். உங்களைப் போன்ற சிறுபையனை வைத்து புகழ்பெறும் பெண் நான் கிடையாது. நான் அமைதியாக இருப்பதால், அதனை சாதகமாக்கிக் கொள்ள வேண்டாம்” என்று பதிவிட்டு ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இந்தப் பதிவுகள் எல்லாம் தற்போது வைரலாகி வரும் நிலையில், இருவரையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஊர்வசி ரவுட்டேலாவும், கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்தும் டேட்டிங் செய்துவருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பின்னர் இருவருக்கும் எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, மனமொத்து இருவரும் அதே ஆண்டு பிரிந்துவிட்டதாகவும், வாட்ஸ் அப் மற்றும் சமூகவலைத்தளப் பக்கத்தில் நடிகை ஊர்வசி ரவுட்டேலாவை, ரிஷப் பந்த் பிளாக் செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும் இந்த செய்திகளை எல்லாம் அப்போது ரிஷப் பந்த் மறுத்திருந்தார். மேலும் இந்த பிரேக்கப்-அப்பிற்குப் பிறகு இஷா நேகி என்பவரை காதலித்து வருவதாக ரிஷப் பந்த் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்