Published : 12,Aug 2022 09:17 AM
’வீடியோவா எடுக்குற?’.. புகார் அளிக்க வந்தவர்கள் மீது மின் மீட்டரை வீசிய ஊழியர்!

தருமபுரி மாவட்டத்தில் தொடர் மின்வெட்டு குறித்து புகார் கூற வந்தவர் மீது, மின்வாரிய ஊழியர் மின் மீட்டரை வீசி தாக்க முற்படும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் தொடர்ந்து மின்வெட்டு நேரிடுவதாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், மின்வாரிய அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ், அவர்களை அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.
அதை ஒருவர் தனது அலைபேசியில் படம்பிடித்ததால் ஆத்திரமுற்ற குப்புராஜ், அங்கிருந்த மின்மீட்டரை எடுத்து வீசியுள்ளார். அரசு அலுவலகத்திற்கு வந்த பொதுமக்களை அரசு ஊழியர் ஒருவர் தாக்க முற்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.