Published : 11,Aug 2022 10:21 PM

ட்ரெண்டாகும் எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் - பிளாப் ஆனதா லால் சிங் சத்தா, ரக்ஷா பந்தன் படங்கள்?

Here-s-Why-Boycott-Laal-Singh-Chaddha-Trends-On-Twitter

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர்கான், அக்ஷய் குமார் ஆகியோரின் படங்கள் ஒரேநாளில் இன்று வெளியானநிலையில், இரண்டு படங்களுமே முதல் நாளிலேயே ரசிகர்களை கவர தவறியுள்ளன.

ராபர்ட் ஜெம்மிக்ஸ் இயக்கத்தில், டாம் ஹாங்கஸ், ராபின் ரைட், சாலி ஃபீல்டு ஆகியோர் நடிப்பில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படம் ‘தி ஃபாரஸ்ட் கம்ப்’. ஆஸ்கர் விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை அள்ளிய இந்தத் திரைப்படத்தின், அதிகாரப்பூர்வ இந்தி ரீமேக் தான் ‘லால் சிங் சத்தா'. இந்தப் படத்தில் கதாநாயகனாக அமீர்கானும், அவருக்கு ஜோடியாக கரீனா கபூரும் நடித்துள்ளனர். அமீர்கானின் நண்பராக நாக சைதன்யா நடித்துள்ளார். ஷாரூக்கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்தப் பட அறிவிப்பு வெளியானபோதே பெரும் எதிர்பார்ப்பு நிலவிவந்தநிலையில், இன்று இந்தப் படம் இந்தி, தமிழ் உள்பட பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.

ஆனால் படம் வெளியானதிலிருந்து கலவையான விமர்சனங்களை இந்தப் படம் பெற்று வருகிறது. ஒருபக்கம் படத்தின் நீளத்தைத் தவிர இந்திய மண்ணுக்கு ஏற்றவாறு இந்தப் படம் இருப்பதாக கூறப்பட்டு நெட்டிசன்கள் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். ஒரிஜினல் படத்தை விட இந்தப் படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், அமீர்கான், கரீனா கபூரின் வயதுக்கேற்ற வித்தியாசமான நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் தனது படங்களில் இந்து மதத்துக்கு எதிராக அமீர்கான் தொடர்ந்து கருத்துக்களை கூறி வருவதால் இந்தப் படத்தை புறக்கணிக்க வேண்டும் என்றும் மற்றொருபுறம் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும், படத்தில் ஜீவன் இல்லை என்றும், உணர்ப்பூர்வமான காட்சிகள் இல்லை, திரைக்கதை இல்லை எனவும் கருத்துக்கள் பதியப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் சகிப்புத் தன்மை குறைந்துவருவதால் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டே வெளியேறி விடலாம் என்று எனது மனைவி அறிவுறுத்தினார் என கடந்த 2015-ம் ஆண்டு கலந்துரையாடல் ஒன்றில் அமீர்கான் கூறியதால், படம் வெளியாவதற்கு முன்பே #BoycottLaalSinghChaddha என்று ட்ரெண்ட் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த ஹேஷ்டேக்கை பெரும்பாலானோர் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அமீர்கான் கேரியரில் ‘லால் சிங் சத்தா’ படம் மிகப்பெரிய தோல்வி என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் #Flop ஹேஷ்டேக்கை பகிர்ந்து ஏராளமான கார்ட்டூன்கள் மற்றும் மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அத்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சிறப்புத் தோற்றத்தில் வந்த படங்கள் (ட்யூப்லைட், ராக்கெட்ரி, பிரம்மாஸ்திரா, லால் சிங் சத்தா) அனைத்துமே தோல்வியை சந்தித்துள்ளதாகவும் கமெண்ட் செய்துள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு பாலிவுட்டில் நெப்போட்டிசத்தால் தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படும் சுஷாந்த் சிங்கிற்கு நீதி கிடைக்கும் வகையில் இந்த படம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், முழுவதுமாகவே பாலிவுட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் பதியப்பட்டு வருகின்றது.

இந்தப் படத்திற்கு ஐ.எம்.டி.பி 10-க்கு 3.4 ரேட்டிங் மட்டுமே வழங்கியுள்ளதால், அதுவும் ட்ரெண்டாகி வருகின்றது. 4 வருடங்களுக்குப் பிறகு சுமார் 20 ஆண்டுகள் உழைப்பிற்குப் பிறகு அமீர்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘லால் சிங் சத்தா’ படத்தின் வசூல் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் பார்வையாளர்கள் இன்றி காணப்படுகின்றன.

இதற்கிடையில், அமீர்கானின் 'லால் சிங் சத்தா'வை புறக்கணிப்பதாக கூறுவது ஜனநாயகமற்ற மற்றும் சர்வாதிகார சித்தாந்தத்தை முன்வைப்பதுபோல் இருப்பதாக காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங் தெரிவித்துள்ளார். "BoycottLalSinghChadha ட்ரெண்டிங்கில் இருக்கிறது. ஏன்? இதற்குப் பின்னால் இருப்பது யார்? மோடிஷா ட்ரோல் ஆர்மியைத் தவிர வேறு யார்! அவர்கள் ஜனநாயகமற்றவர்கள், எதேச்சதிகாரம் மற்றும் சர்வாதிகாரம் கொண்டவர்கள். ரோபோவைப் போல வேலை செய்கிறார்கள்" என்று  ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், அக்ஷய் குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘ரக்ஷா பந்தன்’ திரைப்படமும் தோல்வியை தழுவியுள்ளதாகக் கூறப்பட்டு வருகின்றது. தொடர்ந்து அக்ஷய் குமார் நடிப்பில் 4 படங்கள் தோல்வியடைந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தென் இந்தியப் படங்கள் பாலிவுட்டில் சக்கைப்போடு போட்டு வரும்நிலையில், தொடர்ந்து ‘தாக்கட்’, ‘சாம்ராட் பிருத்விராஜ்’, ‘ஷாம்ஷெரா’, ‘அட்டாக்’, ‘ஜெர்ஸி’, ‘ரன்வே 34’ உள்பட இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான முன்னணி நடிகர், நடிகைகளின் படங்கள் தோல்வியை சந்தித்து வருவது இனி பாலிவுட் திரையுலகத்தின் வெற்றியை கேள்விக்குறியாக்கி உள்ளது.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்