
13 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் மோதி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம், கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய 13 வயது சிறுவனும் அவனிடம் வாகனத்தை கொடுத்த சிறுவனின் தந்தையும் கொலை அல்லாத மரணம் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகர் கிராமத்தில் நேற்று இரவு சாலையில் விளையாடிக் கொண்டிருந்த கோவிந்தராசு என்பவரது மூன்று வயது குழந்தை மீது, அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியது. இதில் குழந்தை நீண்ட தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அதனால் படுகாயம் அடைந்த அக்குழந்தை, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இரண்டு சக்கர வாகனத்தில் வந்தது எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் என்றும் அவர் அதே கிராமத்தை சேர்ந்த சிவகுரு என்பவரது மகன் என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மங்கலம்பேட்டை போலீசார் கொலை அல்லாத கொலை மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்கு 304/2 பதிவு செய்துள்ளனர்.
கொடுங்காயம் அல்லது மரணம் ஏற்படுத்தும் என்று தெரிந்தும் அஜாகரத்தையாக செயல்பட்டதாக இந்த பிரிவு சொல்கிறது. இரண்டு சக்கர வாகனத்தை சிறுவர்கள் ஓட்டக்கூடாது என தெரிந்தும் ஓட்டுநர் உரிமம் இல்லை என்று தெரிந்தும் அவரிடம் இரண்டு சக்கர வாகனத்தை கொடுத்ததற்காக சிவகுருவும் விபத்து ஏற்படுத்திய 13 வயது சிறுவனையும் மங்கலம்பேட்டை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரிவுக்கு 10 ஆண்டு அல்லது ஆயுள் தண்டனையோ கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது