Published : 08,Aug 2022 07:07 PM

காங். கட்சியின் இடைக்கால தலைவராகிறாரா ப.சிதம்பரம்?.. அடுத்த நகர்வு என்ன?

P--Chidambaram-is-likely-to-become-the-Interim-President-of-the-Congress-Party

எதிர்வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக ப.சிதம்பரம் தேர்வாக வாய்ப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. 

2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தற்போதே தயாராகி வருகிறது. இந்த தேர்தலிலும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடியே இருப்பார் என அண்மையில் பீகாரில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். மத்தியில் வலுவாக உள்ள பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொருட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒருபுறமும், மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மறுபுறமும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், காங்கிரஸ் கட்சி பொதுத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் விவகாரங்கள் குழு, தேர்தல் செயற்பாட்டு குழு, யாத்திரை குழு என்ற 3 குழுக்களை அண்மையில் அமைத்தது. ஆனால், அதே நேரத்தில் உட்கட்சி தேர்தலை நடத்தாமலும் கட்சிக்கு நிரந்தர தலைவரை தேர்வு செய்வதிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சுணக்கம் காட்டி வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக எல்லோராலும் பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில் குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான கபில் சிபில் மற்றும் ஹர்திக் படேல் ஆகியோர் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மாற்றுக்கட்சியில் இணைந்துள்ளனர்.

image

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருவதால் இந்த கூட்டத்தொடருக்கு பிறகு உட்கட்சி தேர்தலை நடத்த காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு இருப்பதாகவும், அப்போது காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் கூட்டப்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. புதிய தலைவர் தேர்வு செய்யும் வரை சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடருவார் எனவும், அவரின் பதவிக்கு காலஅவகாசம் எதுவும் கிடையாது என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஒருபுறம் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் சோனியா காந்தி கட்சியின் முழு நேர தலைவராக செயல்படமாட்டார் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், புதிய தலைவராக ராகுல் காந்தியே பதவியேற்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, மல்லிகார்ஜுனா கார்கே, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கை தீவிரப்படுத்தி உள்ள அமலாக்கத்துறை இந்த வழக்கு தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுனா கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி யங் இந்தியா நிறுவனத்திற்கு சீல் வைத்தது. 

image

இந்த வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை கைது செய்வதற்கு அமலாக்கத்துறை திட்டமிட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி இருக்கக்கூடிய நிலையில் ஒருவேளை ராகுல் காந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்தால், முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்படலாம் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் நேரு குடும்பத்தில் இருந்து தான் ஒருவர் காங்கிரஸ் கட்சியை வழிநடத்த வேண்டுமே தவிர பிறர் யாரும் காங்கிரஸ் கட்சியை வழிநடத்தக்கூடாது என பல தலைவர்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். மிக முக்கியமாக கட்சிக்கு முழு நேர தலைவர் என்பது தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ப.சிதம்பரத்தை இடைக்கால காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்க காரிய கமிட்டி உறுப்பினர்கள் முழுமையாக ஆதரவு தெரிவிப்பார்களா? என்பது கேள்விக்குறி தான்.

image

ப.சிதம்பரத்தை காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தேர்ந்தெடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் மிகமூத்த தலைவர் என்பதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் தேர்தலில் ப.சிதம்பரம் பெயரும் தற்போது இடம்பெற்றுள்ளது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்று இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடி புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்