Published : 06,Aug 2022 04:09 PM
ரஷ்ய அதிபராக உலா வருவது போலி புதின்? உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவல்!

உடல் நலக்குறைவு காரணமாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தன்னை போன்ற தோற்றமுடையவரை தனக்கு பதில் பொது இடங்களுக்கு அனுப்பி வருவதாக உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், பொது தோற்றங்களைத் தவிர்க்க, தனது தோற்றத்தை ஒத்திருக்கும் நபரை பயன்படுத்தினார் என்றும் உக்ரைனின் செய்தித்தளமான டிஎஸ்என் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் டெஹ்ரானில் நடந்த உச்சிமாநாட்டில் புடின், தனது தோற்றத்தை போன்ற வேறொருவரை பயன்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட கைரிலோ புடானோவ் தொலைக்காட்சி ஒன்றுக்கு இதுதொடர்பாக பேட்டியளித்துள்ளார். புடினின் உயரமும் காதுகளும் சமீபத்திய தோற்றங்களில் மாறியுள்ளதாகவும், ஒருவரின் கைரேகையை போன்றே காதுகளும் தனித்துவமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புடினின் வெவ்வேறான பழக்க வழக்கங்கள், நடத்தைகள், நடைகள் மற்றும் சில நேரங்களில் நெருக்கமாகப் பார்த்தால் வெவ்வேறு உயரங்கள் இருப்பதையும் கண்டறியலாம் என்றும் புடானோவ் தெரிவித்துள்ளார்.