Published : 05,Aug 2022 10:53 AM

திருச்செந்தூர்: பேச மறுத்த காதலியின் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

boyfriend-tried-to-commit-suicide-after-slitting-his-girlfriend-s-throat-with-a-knife-near-Tiruchendur

திருச்செந்தூர் அருகே காதலியை கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருகே நா.முத்தையாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்த பெருமாள் மகள் வனசந்தியா(20). இவர் உடன்குடி அருகில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்தவர் பாண்டியன் மகன் கார்த்திக். 21 வயதான இவர், ஆட்டோ ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் வனசந்தியாவின் தந்தைக்கு தெரியவந்துள்ளது. இதனால் மகளை கண்டித்துள்ளார்.

இதையடுத்து, வனசந்தியா, கார்த்திக்கிடம் கடந்த ஒரு மாதமாக பேசுவதை தவிர்த்து வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், கார்த்திக் தன் காதலி வனசந்தியாவை சந்திக்க வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த வனசந்தியாவிடம், தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு வனசந்தியா மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கார்த்திக், தனது உடலில் மறைத்து வைத்திருந்த கத்தியால் வனசந்தியா கழுத்தை அறுத்துவிட்டு சென்றுவிட்டார்.

image

இதில் பலத்த காயமடைந்த வனசந்தியா வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியே வந்து சத்தம் போட்டுள்ளார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தனது வீட்டுக்குச் சென்ற கார்த்திக், தனது அறையை பூட்டிவிட்டு மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்டுக்கொள்ள முயற்சித்துள்ளார்.

இதனைப் பார்த்த அவரது குடும்பத்தினர் உடனடியாக கார்த்திக்கை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்