Published : 05,Aug 2022 10:34 AM

குடிபோதையில் கார் ஓட்டி மூன்று பேர் பலி: பெண் மருத்துவரை வழக்கிலிருந்து விடுவிக்க மறுப்பு

Drunken-driving-kills-three-people---Refusal-to-acquit-female-doctor-from-case-

குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று மூன்று பேர் உயிரிழக்க காரணமான வழக்கிலிருந்து பெண் மருத்துவரை விடுவிக்க மறுத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னையை சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர் அன்புசூர்யா. அவர் கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரவு நேர பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டு முழுவதுமாக குடித்துவிட்டு காரை ஓட்டி வந்துள்ளார். நள்ளிரவு 3 மணியளவில் மெரினா கடற்கரை சாலையில் வேகமாக காரை ஓட்டிவந்த அவர் வண்டியை இயக்க முடியாமல் இயக்கி அங்குமிங்குமாய் இடித்து ஓட்டி வந்து அருகில் இருந்தவர்கள் மீது மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தினார். இந்த கோர விபத்தில் இரண்டு மீன் வியாபாரிகள் மற்றும் தலைமைக் காவலர் ஒருவரும் பலியாயினர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்ததுடன் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் பெருத்த சேதமடைந்தன.

இந்த விபத்து தொடர்பாக, மூன்று பேரின் உயிரிழப்பிற்கு காரணமான அன்புசூர்யா மீதும் அவருடன் காரில் சேர்ந்து பயணித்த அவரது மூத்த சகோதரி பெண் மருத்துவர் லட்சுமி மற்றும் நண்பர் செபஸ்டியன் கிருஷ்ணன் ஆகிய இருவர் மீதும் சேர்த்து சென்னை மாநகர காவல் துறையின் அண்ணா சதுக்கம் காவல் நிலைய போக்குவரத்து புலனாய்வு பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

image

தான் காரை ஓட்டவில்லை எனவும் காரில் பயணம் மட்டுமே செய்த நிலையில் தன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என பெண் மருத்துவர் லட்சுமி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது. அந்த உத்தரவை மறு ஆய்வு செய்து தன்னை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் லட்சுமி வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் தனது சகோதரர் குடித்திருக்கிறார் என்று தெரிந்தும், வாகனம் ஓட்டுவதை தடுத்து நிறுத்தாமல் தானும் உடன் சேர்ந்து பயணித்து குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததால், அவர் மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனை ஏற்ற உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய குற்றத்தில் ஓட்டுநர் மட்டுமல்லாமல், அவருடன் சேர்ந்து பயணித்த மற்றவர்களுக்கும் சமமான பொறுப்பிருப்பதால், மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க எவ்வித இடமும் இல்லை எனக் கூறி, மருத்துவர் லட்சுமியை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்து உத்தரவிட்டார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்