Published : 03,Aug 2022 08:55 PM

வாட்டும் வறுமை; ஊராரின் இளக்கார பார்வை:தடையை தகர்த்து டிஎஸ்பி ஆன அரசுப்பள்ளி மாணவியின் கதை

No-school--No-road--Only-confidence--The-story-of-a-government-school-student-becoming-a-DSP-

எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வறுமை நிறைந்த வாழ்வை கடந்து, தற்போது நடந்து முடிந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு செல்ல உள்ளார் ஒரு அரசுப் பள்ளி மற்றும் அரசு கல்லூரியில் பயின்ற ஏழை மாணவி ஒருவர். இதன் மூலம் தன்னம்பிக்கையும் மனதில் உறுதியும் இருந்தால் சாதிப்பதற்கு வறுமையும் குடும்ப சூழலும் தடையல்ல என்பதை உலகிற்கு உரக்க உணர்த்தி உள்ளார் அந்த மாணவி. யார் அந்த மாணவி? எவ்வாறு அவர் இதை சாதித்தார்?

புதுக்கோட்டை அருகே உள்ளது கிழக்கு செட்டியாப்பட்டி கிராமம். இன்றைய நவீன நாகரிக வளர்ச்சிகள் ஏதும் எட்டிப் பார்க்காத ஒரு குட்டி கிராமம் அது. நடப்பதற்கு கூட தகுதியற்ற சாலை இருக்கும் ஊர். நாள் ஒன்றுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகள் மட்டுமே வந்து செல்லும் பேருந்து வசதி. கல்வி கற்க பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமெனில் 5 கிமீ தூரத்தில் உள்ள பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டும். விவசாயத்தையும் விவசாயம் சார்ந்த தொழிலையும் மட்டுமே நம்பி வாழும் அடித்தட்டு மக்கள் நிறைந்த ஊர். இவைதான் இந்த கிராமத்தின் இன்றைய நிலை.

image

இந்த கிராமத்தைச் சேர்ந்த வீரமுத்து - வீரம்மாள் தம்பதிக்கு நான்கு பெண் பிள்ளைகள். இவர்களில் மூன்றாவதாக பிறந்தவர் பவானியா. சிறிய உணவகம் வைத்து சொற்ப வருமானம் கூட கிடைக்காததால் தற்போது சமையல் கூலி வேலைக்கு செல்லும் தந்தை, விவசாய கூலி வேலைக்கு செல்லும் தாய்; பிறந்ததிலிருந்து தொடரும் வறுமை இந்த பின்புலத்தில் இருந்து வளர்ந்த பவானியா அரசு பள்ளியிலேயே பிளஸ் டூ வரை படித்து அதன் பின் புதுக்கோட்டையில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் இளங்கலை கணிதம் பட்டப்படிப்பை தமிழ்வழியில் படித்துள்ளார்.

image

தன்னம்பிக்கையும் தான் கொண்ட லட்சியத்தை அடைய வேண்டும் என்ற நெஞ்சுரத்தோடு விடாமுயற்சியுடன் படித்து நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வில் வெற்றி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகி தங்கள் கிராமத்திற்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் பவானியா. இதனால் அவரது கிராம மக்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.பல்வேறு தரப்பிலிருந்து பவானியாவிற்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது. ஆனால் இந்த இலக்கை எட்ட பவானியா கடந்து வந்த பாதை துயரமானது.

image

“அடிப்படை வசதியே இல்லாத கிழக்கு செட்டியாப்பட்டி என்கிற கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் 3வதாக பிறந்த எனக்கு கிராம மக்களின் வாழ்க்கையை பார்க்கும்போது நாமும் மாவட்ட ஆட்சியராக வரவேண்டும் என்ற எண்ணம், எனக்குள் சின்னவயதில் இருந்தே இருந்தது. உள்ளூர் அரசுப் பள்ளியில் தொடக்க கல்வியும் 5 கி.மீ தூரத்தில் உள்ள ஏ.மாத்தூர் அரசுப் பள்ளியில் மேல்நிலை கல்வியும் படித்தேன். ஒரு பள்ளி நிகழ்ச்சியில் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் பேசும்போது முயன்றால் எதையும் சாதிக்கலாம் என்ற அவரது பேச்சு எனக்கு மேலும் ஆசையை தூண்டியது.

image

அதன் பிறகு 4 கி.மீ சைக்கிள்ல போய் பஸ் ஸ்டாண்ட்ல சைக்கிளை போட்டுட்டு, பஸ் ஏறி புதுக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் படிச்சேன். அப்ப ஒரு நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் சரவு ஐஏஎஸ் வந்து பேசுனாங்க. பெண்கள்தான் தற்கொலை முடிவுக்கு போறாங்க. அதை நீங்கள் மாத்தணும் என்று பேசினார். எனக்கு அவங்க பேச்சு மனசுல ரொம்ப ஆழமா பதிஞ்சது. அப்போது யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சிக்கான மாணவர் தேர்வு நடந்தது. அதில் என்னை சேர்க்கல.

2019-ல் பிஎஸ்சி முடிக்கும்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பு வந்தது. உடனே விண்ணப்பிச்சுட்டு சுற்றியுள்ள மாணவர்களிடம் பழைய புத்தங்களை வாங்கி படிச்சேன். +1, +2 புத்தகம் கிடைக்கல. ஆனால் நான் +2 படிக்கும்போது கொடுத்த அரசு லேப்டாப்பில் ஏற்றிக் கொடுத்திருந்த புத்தகங்களை படிச்சு தேர்வு எழுதினேன். முதல்நிலை தேர்விலேயே தேர்ச்சி பெற்றேன்.

நேரடி பயிற்சியின்போது கொரோனா வந்துவிட்டது. பிறகு வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்பில் படிச்சதோட நிறைய தேடி குறிப்புகள் எழுதி படிச்சேன். இப்ப மெயின்லயும் தேர்ச்சி பெற்று கொஞ்சம் மார்க் குறைஞ்சதால டிஎஸ்பி கிடைத்திருக்கிறது. இதைப் பார்த்து குடும்பத்தினர் மட்டுமல்லாம ஊரே என்னை கொண்டாடுறாங்க. ஆனால் எனது இலக்கை இன்னும் நான் எட்டவில்லை. ஐஏஎஸ்தான் என் இலக்கு. அதனை எட்ட வேண்டும். அதற்காக மறுபடியும் படிக்க தொடங்கி இருக்கிறேன்” என்றார் பவானியா.

image

மேலும் “பிறந்ததிலிருந்து எங்கள் குடும்பம் வறுமையில் இருந்ததால் படிக்கும் போதே விவசாய கூலி வேலை, பூவெடுக்கும் வேலை உள்ளிட்ட கூலி வேலைகளுக்கு சென்று பெற்றோருக்கு உதவி செய்தேன். என் சகோதரிகளைப்போலவே என்னையும் சிறுவயதிலேயே பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் அவற்றைத் ஏற்றுக்கொள்ளாமல்  படிக்க வேண்டும் என அடம் பிடித்து தற்போது சாதனை படைத்துள்ளேன்.

வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு சென்றதும் என்னைபோல ஏழ்மை நிலையில் உள்ள எங்கள் கிராமத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கும் பிற மாணவிகளுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்களையும் வாழ்வில் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்வேன்” என நெகிழ்ச்சியோடு தெரிவித்தார் பவானியா.

image

பவானியாவின் இந்த சாதனை குறித்து பேசிய அவரது பெற்றோர்கள் “எங்களுக்கு 4 பெண்குழந்தைகள் என்பதால் சிலர் எங்களை இளக்காரமாக பார்த்தனர். இதனாலையே முதல் இரண்டு பெண்பிள்ளைகளை சிறுவயதிலே திருமணம் செய்து கொடுத்து விட்டோம். இந்த பிள்ளையையும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் நிச்சயம் நான் படித்து அரசுப் பணிக்கு செல்வேன்; குடும்ப வறுமையை போக்குவேன் என பவானியா மனதில் உறுதியோடு இருந்ததால் இந்த கஷ்டமான சூழ்நிலையிலும் கூட படிக்க வைத்தோம். தற்போது எங்கள் மகள் குரூப் ஒன் தேர்வில் தேர்ச்சி பெற்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் பணிக்கு செல்ல இருப்பது எங்களுக்கு மன மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

image

எங்கள் மகள் சாதனை படைத்துள்ளதை பார்க்கையில் மற்ற இரண்டு பெண் குழந்தைகளை அவசரப்பட்டு திருமணம் செய்து கொடுத்து விட்டோமோ என நினைக்கிறோம். நாங்கள் செய்த தவறை தற்போது உணர்கிறோம். அடுத்து உள்ள நான்காவது பெண் குழந்தையும் நன்கு படிக்க வைத்து இதே போல் சாதிக்க வைப்போம் . மற்றவர்களும் பெண் குழந்தைகளை சிறுவயதிலேயே திருமணம் செய்து கொடுக்காமல் நிச்சயம் அவர்களை படிக்க வைத்தால் அவர்களும் நிச்சயம் வாழ்வில் சாதித்து பெற்றோர்களுக்கு பெருமை ஏற்படுத்தி கொடுப்பார்கள். இத்தனை நாட்கள் வறுமையில் வாழ்ந்தாலும் தங்கள் மகள் பவானி தற்போது சாதனை படைத்திருப்பது எங்களுக்கு மட்டுமல்ல; எங்கள் கிராமத்திற்கே பெருமை” என்று மன மகிழ்வோடு தெரிவித்தனர்.

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்