Published : 03,Aug 2022 07:04 AM
கர்நாடகா: தொடர்ந்து பெய்யும் கனமழை - வீட்டின் மீது மலை சரிந்து விழுந்து 4 பேர் பலி

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக பட்கல் என்ற இடத்தில் ஒரு வீட்டின் மீது மலை சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக உத்தர கன்னடா மாவட்டத்தின் சில பகுதிகள் முற்றிலும் நீரில் மூழ்கி பல மலைகள் சரிந்து விழுந்துள்ளன.
இம்மாவட்டத்தின் பட்கல் தாலுகா கிராமத்தில் லட்சுமி நாயக் என்பவரது வீட்டின் மீது மலை சரிந்து விழுந்ததில் வீட்டில் தங்கிருந்த லட்சுமி நாராயண நாயக் (48), அவரது மகள் லட்சுமி நாயக் (33), சகோதரியின் மகன் பிரவீன் நாயக் (20) மகன் ஆனந்த நாயக் (32) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், 3 பேரின் உடல்களை மீட்ட நிலையில், மற்றோர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அங்கு வந்த எம்எல்ஏ சுனில் நாயக், மாவட்ட ஆட்சியர் முல்லே முகிலன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.