Published : 01,Aug 2022 08:09 PM

20 வயதிலேயே கைம்பெண்!.. தூய்மை பணியாளர் டூ வங்கி அதிகாரி ஆன பெண்ணின் சாதனை கதை!

A-cleaning-worker-who-lost-her-husband-at-the-age-of-20-became-an-assistant-manager-of-SBI-Bank-

16 வயதில் திருமணம்! 20 வயதில் கணவன் மரணம்! 10 வகுப்பு கூட படிக்காமல் மும்பை பாரத ஸ்டேட் வங்கி கிளையில் தூய்மைப் பணியாளராக வேலைக்கு சேர்ந்த பிரதிக்‌ஷா, பட்டதாரியாக உருவெடுத்து 37 வருடங்களுக்கு அயராத உழைப்பிற்கு பிறகு அதே எஸ்பிஐ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார்.

“யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது தளர்ச்சி அடைந்தால், எனது கதை அவர்களைச் சென்றடைந்து ஊக்கப்படுத்த வேண்டும்” என்று கூறி அவர் பகிர்ந்த அவரது வாழ்கைக் கதையை இத்தொகுப்பில் பார்ப்போம்.

Motivational Story of Pratiksha Tondwalker Who Joined SBI as Sweeper now became Assistant Genral Manager of same bank 

16 வயதில் திருமணம்! 20 வயதில் கணவன் மரணம்!

1964 ஆம் ஆண்டு புனேவில் பிறந்தார் பிரதிக்‌ஷா. அவருடைய குடும்பம் மிக ஏழ்மையான நிலையில் இருந்ததால், பிரதிக்‌ஷா 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை முடிப்பதற்குள், அவளது 16வது வயதிலேயே சதாசிவ் காது என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். சதாசிவ் காது மும்பை எஸ்பிஐ வங்கியில் புத்தக பைண்டராக பணிபுரிந்ததால், அவளும் மும்பைக்கு பயணப்பட்டார்.

இருவருக்கும் சில வருடங்களுக்கு பின் “விநாயக்” என்ற மகன் பிறக்க, அதைக் கொண்டாடுவதற்காகவும் கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் புனேவில் உள்ள சொந்த கிராமத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். அப்படி செல்லும்போது அவர்களது வாகனம் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கவே சதாசிவ் காது உயிரிழந்தார். 20 வயதிலேயே கணவனை பறிகொடுத்த பிரதிக்‌ஷா தன் மகனுக்காக மன உறுதியுடன் வாழத் துவங்கினார்.

மும்பை எஸ்பிஐ கிளையில் தூய்மைப் பணியாளர்:

கணவருக்கு வங்கி அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வாங்குவதற்காக அவரது வங்கிக் கிளைக்குச் சென்றார் பிரதிக்‌ஷா. “வங்கியில் வேலை பார்க்குமளவு நான் படிக்கவில்லை. நான் பிழைக்க ஏதாவது ஒரு வேலை தந்து உதவுங்கள்” என்று வங்கி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார் பிரதிக்‌ஷா. பகுதி நேர தூய்மைப் பணியாளராக பணிபுரிய முடியுமா என்று வங்கி அதிகாரிகள் கேட்டதற்கு, உடனடியாக சம்மதித்துள்ளார் பிரதிக்‌ஷா. காலையில் 2 மணி நேரம் வங்கி வளாகம் முழுவதையும் துடைத்து, கழிவறைகளை சுத்தம் செய்வதற்கு பிரதிக்‌ஷாவிற்கு 65 ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. மும்பையில் வாழ்க்கையை கடத்துவதற்கும் மகனை கவனித்து கொள்வதற்கும் மீதமுள்ள நேரத்தில் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்துள்ளார். ஆனால் வங்கியில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும்போது, அங்குள்ள அதிகாரிகளைப் போல அவர்களில் ஒருவராக பணியாற்ற பிரதிக்‌ஷாவுக்கு ஆசை வந்துள்ளது.

SBI savings account: How to change, update email ID online

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார்:

அதற்கு பட்டதாரியாக வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட அவர், 10 ஆம் வகுப்பு தேர்வுகளை எப்படி முடிப்பது என்றுஅந்த வங்கி அதிகாரிகளிடம்  கேட்க ஆரம்பித்தார். அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருந்த சில வங்கி அதிகாரிகள் அவளுக்கு தேர்வு விண்ணப்ப படிவங்களை நிரப்ப உதவியதுடன், படிக்க ஒரு மாத விடுப்பும் கொடுத்துள்ளனர்.

ஆனால் புத்தகங்கள் மற்றும் படிப்பதற்கு தேவையான பொருட்களைப் பெறுவதே அவளுக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக, அவளது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் சேர்ந்து அவளுக்குப் தேவையான பொருட்களை வாங்கிக்கொடுத்து, 10 ஆம் வகுப்புத் தேர்வில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் அவர் தேர்ச்சி பெற உதவியுள்ளனர். அடுத்து 12 ஆம் வகுப்பையும் பிரதிக்‌ஷா வெற்றிகரமாக தேர்ச்சி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகரத் துவங்கினார்.

தடையாய் நின்ற வறுமை!

“எனது பொருளாதார நிலை மோசமாக இருந்தது. நான் பெரிதாக எதையும் சம்பாதித்ததில்லை. நான் பேருந்தில் செல்லும்போது சில நிறுத்தங்களுக்கு முன்பே இறங்கி விடுவேன். அப்படி மிச்சப்படுத்தும் பணத்தில்தான் என் மகனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொடுப்பேன். அந்த அளவுக்கு வறுமையில் இருந்தோம்” என்று தனது கல்லூரிப் படிப்பு துவக்க நாட்கள் குறித்து பகிரும் போது குறிப்பிட்டார் பிரதிக்‌ஷா. பின்னர் தனது சேமிப்பின் உதவியுடன் மும்பையின் விக்ரோலியில் உள்ள இரவு கல்லூரியில் சேர முடிவு செய்தார் பிரதிக்‌ஷா. இரவுக் கல்லூரியைத் தேர்ந்தெடுத்து, தேர்ச்சி பெற்று 1995ல் உளவியல் துறையில் பட்டம் பெற்றார். அப்போதுதான் வங்கியில் எழுத்தராகப் பதவி உயர்வு பெற்றாள் பிரதிக்‌ஷா.

இரண்டாவது திருமணம்:

இதற்கிடையே 1993 ஆம் ஆண்டு பிரதிக்‌ஷா, பிரமோத் டோண்ட்வால்கரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வங்கித் தூதவரான அவரது கணவர் அவருக்கு உறுதுணையாக இருந்து வங்கித் தேர்வுகளை பிரதிக்‌ஷா எழுத ஊக்குவித்தார். பிரமோத் வீட்டு வேலைகளை கவனித்துக்கொள்ள, நிம்மதியாக படிக்கத் துவங்கி இருக்கிறார் பிரதிக்‌ஷா. ஆனால் பக்கவாதத்தால் பிரமோத் திடீரென பாதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் மனைவி படிக்கும்போது தேநீர் கொடுக்க தவறியதில்லை என்று அகம் மகிழ கூறுகிறார் பிரதிக்‌ஷா.

உதவி மேலாளர் ஆனார் பிரதிக்‌ஷா:

அவரது மகன் விநாயக் தனது தாயை மேலும் படிக்க வைக்க பல உதவிகளை செய்தார். அதன் விளைவாக 2004 ஆம் ஆண்டில், பிரதிக்‌ஷா ஒரு பயிற்சி அதிகாரி (Trainee Officer) ஆக பதவி உயர்வு பெற்றார். படிப்படியாக அடுத்தடுத்து முன்னேறி, கடந்த ஜூன் மாதம் உதவி பொது மேலாளராக (Assistant General Manager) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

From sweeper to SBI's AGM and everything in between: The saga of Pratiksha  Tondwalkar

இன்னும் செல்ல வேண்டும்:

எஸ்பிஐ உடனான பிரதிக்‌ஷாவின் 37 வருட காலப் பயணத்தில் அவரது விடாமுயற்சி ஆகியவை உதவி மேலாளர் பதவி வரை அவரை உயர்த்தியுள்ளன. பிரதிக்‌ஷா ஓய்வு பெறுவதற்கு இரண்டு வருடங்கள் உள்ளன. ஆனால் அது அவருக்கான பாதையின் முடிவு அல்ல. பிரதிக்‌ஷா 2021 இல் இயற்கை மருத்துவப் படிப்பை முடித்தார், ஓய்வு பெற்ற பிறகு, அந்த அறிவைப் பயன்படுத்தி மக்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறார்.

"எனது பயணத்தை நான் திரும்பிப் பார்க்கும்போது, அது எனக்கு சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது, ஆனால் அதை இவ்வளவு தூரம் சிறப்பாக கொண்டு சென்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். யாராவது மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது தளர்ச்சி அடைந்தால், எனது கதை அவர்களைச் சென்றடைந்து ஊக்கப்படுத்த வேண்டும்.” என்று தனது கதையை நிறைவு செய்தார் பிரதிக்‌ஷா!

சற்று முன்எடிட்டர் சாய்ஸ்