Published : 01,Aug 2022 04:29 PM

தென் மாவட்டத்தில் கார்த்தியின் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா - எங்கே, எப்போது தெரியுமா?

Actor-Karthi-s--Viruman-Audio-launch-release-date-announced

கார்த்தியின் ‘விருமன்’ இசை வெளியீட்டு விழா மதுரையில் நடக்க உள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

‘கொம்பன்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் முத்தையா மற்றும் நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளப் படம் ‘விருமன்’. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக, இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அதிதி ஷங்கர் திரையுலகில் அறிமுகமாகிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சூர்யா-ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. ஏற்கெனவே இந்தப் படத்தின் ‘கஞ்சா பூவு கண்ணால’ பாடல் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், விக்ரமின் ‘கோப்ரா’ படம் தள்ளிப்போனதால், ‘விருமன்’ படம் முன்னதாகவே, அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதியே திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது.

image

இதையடுத்து ‘விருமன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, வருகிற ஆகஸ்ட் 3-ம் தேதி மதுரை நகரில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தி படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தேனி மற்றும் மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தநிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவை அங்கு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.